பத்திரப்பதிவுக்கு முன் மனை உட்பிரிவு கட்டாயம் அமலுக்கு வருமா அரசு உத்தரவு?
பத்திரப்பதிவுக்கு முன் மனை உட்பிரிவு கட்டாயம் அமலுக்கு வருமா அரசு உத்தரவு?
ADDED : ஜூன் 05, 2025 11:20 PM
சென்னை:வீடு, மனையை பாகங்களாக பிரித்து விற்பவர்கள், அதற்கான பத்திரப்பதிவுக்கு முன், 'சர்வே' எண் உட்பிரிவு செய்யும் பணிகளை முடிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு முழுமையாக அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில், வீடு, மனை வாங்குவோர், குறிப்பிட்ட சர்வே எண் அல்லது உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தையும் வாங்கினால், பட்டா மாறுதலுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டாம்; பத்திரப்பதிவின் போது சார்-பதிவாளர் சரிபார்ப்பு செய்தாலே போதும்.
மக்கள் ஆதரவு
இதன் அடிப்படையில், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும். இதில், ஆரம்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், தற்போது பரவலாக மக்கள் ஆதரவு கிடைத்து உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, ஒரு சொத்தை ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாக விற்பது பரவலாக அதிகரித்துள்ளது. இவ்வாறு பகுதியாக சொத்து விற்கும்போது, உரிமையாளர் தானாக முன்வந்து சர்வேயரை அழைத்து புதிய பாகத்தின் எல்லைகளை வரையறுத்து, சம்பந்தப்பட்ட சர்வே எண்ணில் உரிய உட்பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரிக்கப்படும் பாகங்களுக்கு முன்கூட்டியே உட்பிரிவு ஏற்படுத்தினால் மட்டுமே, அதன் விற்பனைக்கான பத்திரப்பதிவை செய்ய வேண்டும் என, 2020ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கான அரசாணையும் அப்போது பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்துவதில், சார்-பதிவாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
அரசாணை
இதற்கான காரணம் குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிலத்தை சிறு பகுதிகளாக பிரித்து விற்பவர்கள், அதற்கான பத்திரப்பதிவுக்கு முன்பே உட்பிரிவை ஏற்படுத்த வேண்டும். இதற்கான அரசாணை வந்தது உண்மை தான்.
இதை கடைப்பிடிக்க, பதிவுத்துறை ஐ.ஜி.,யும் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அவசர நிலையில் சொத்துக்களை விற்கும் மக்கள், உட்பிரிவு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை.
அரசாணையின்படி, பத்திரப்பதிவு செய்ய மறுத்தால், அதை வேறு விதமாக சித்தரித்து மக்கள் புகார் செய்கின்றனர். இதனால், இந்த விஷயத்தில் சார்-பதிவாளர்கள் கடுமையாக நடப்பதில்லை.
இருப்பினும், பத்திரப்பதிவுக்கு முன்னரே உட்பிரிவு செய்வதால், பட்டா மாறுதல் எளிதாகும் என்பதையும், மோசடிகளை தவிர்க்க முடியும் என்பதையும், பொது மக்களுக்கு விளக்க, சார்-பதிவாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.
மேலும், இதுபோன்ற பணிகளுக்கு, நில அளவையாளர்கள் உடனடியாக கிடைப்பதற்கும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.