பெயர் நீக்கத்துக்கு அரசு திடீர் கட்டுப்பாடு புது ரேஷன் கார்டு வழங்குவதை தடுக்கவா? பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு
பெயர் நீக்கத்துக்கு அரசு திடீர் கட்டுப்பாடு புது ரேஷன் கார்டு வழங்குவதை தடுக்கவா? பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு
ADDED : நவ 06, 2025 09:49 PM
சென்னை: மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக, பலரும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'ரேஷன் கார்டில் உறுப்பினர் நீக்கத்துக்கு ஆண்டுக்கு இரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்' என்ற உணவு வழங்கல் துறையின் உத்தரவுக்கு, பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.
பயனாளிகள் தேர்வு ரேஷன் கார்டுகளுக்காக, 2023 மே வரை மாதம் சராசரியாக, 40,000 - 50,000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், சராசரியாக, 25,000 - 30,000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், 2023 செப்., முதல் துவக்கப்பட்டது.
இதற்காக, அனைத்து கார்டுதாரர்களின் வீடுகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். எனவே, புதிய ரேஷன் கார்டு கேட்டு, அதிகம் பேர் விண்ணப்பம் செய்தனர்.
இதனால், ரேஷன் கார்டு வழங்குவதிலும், ஏற்கனவே உள்ள கார்டில் இருந்து உறுப்பினர் பெயர் நீக்கத்துக்கும் அதிக கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. இதனால் மாதம் சராசரியாக, 25,000 பேர் விண்ணப்பம் செய்தாலும், 5,000 பேருக்கு கூட, புதிய கார்டு வழங்கப்படுவதில்லை.
இதே நிலை தான், உறுப்பினர் பெயர் நீக்கத்திற்கும் உள்ளது. ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில், எத்தனை முறை வேண்டுமானாலும் விண்ணப்பிக்கும் வசதி இருந்தது.
இரு முறை தற்போது, உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கத்துக்கு, ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் என, ஆண்டுக்கு இரு முறை மட்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடா என்ற சந்தேகம் கார்டுதாரர்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் டி.சடகோபன் கூறியதாவது:
ரேஷன் கார்டை தான் மக்கள் அத்தியாவசிய ஆவணமாக பயன்படுத்தி வருகின்றனர். வேலை, கல்வி போன்றவற்றுக்காக பலரும் அடிக்கடி முகவரி மாறுகின்றனர்.
பெற்றோருடன் ஒரே குடும்பத்தில் வசிப்பவர், திருமணாகி தனி குடித்தனம் செல்லும்போது, புதிய கார்டுக்கு விண்ணப்பம் செய்ய, ஏற்கனவே உள்ள கார்டில் பெயரை நீக்க வேண்டும்.
உறுப்பினர் நீக்கம், முகவரி மாற்றம் அத்திவாசிய சேவைகளாக உள்ளன. ஒவ்வொரு சேவைக்கும் ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.
முகவரி மாற்றம் இதை, விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங் களுடன் சரியாக பதிவேற்றம் செய்தாலும், முறையாக பரிசீலிக்காமல் விண்ணப்பத்தை, அதிகாரிகள் நிராகரிக்கின்றனர்.
அப்படி இருக்கும்போது, ஆண்டுக்கு இரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை எப்படி ஏற்க முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல், ஆண்டுக்கு, 100 முறைக்கு மேல் முகவரி மாற்றம் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதை தடுக்கவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

