மதுரை--குருவாயூர் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுமா
மதுரை--குருவாயூர் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுமா
ADDED : ஆக 30, 2025 06:16 AM

ராமநாதபுரம்; மதுரை -குருவாயூர் விரைவு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் இருந்து குருவாயூருக்கு செங்கோட்டை, புனலுார் வழியாக தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்து இயக்கினால் ஆன்மிக தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என ராமநாதபுரம் பயணிகள் நலசங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
அதன் நிர்வாகிகள் கூறியதாவது:
மதுரை--குருவாயூர் விரைவு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்து இயக்கினால் திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்துார், சங்கரன்கோவில், தென்காசி, ஆரியங்காவு, சபரிமலை போன்ற ஆன்மிக தலங்கள் ராமேஸ்வரத்துடன் நேரடியாக இணைக்கப்படும்.
ராமேஸ்வரத்தில் இருந்து குற்றாலம் செல்லவும், கேரளத்தில் இருந்து உத்திரகோசமங்கை, ஏர்வாடி தர்ஹா, இடைக்காட்டூர், திருப்புல்லாணி, தேவிபட்டினம் போன்ற பகுதிகளுக்கு வருவோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விஸ்டோடோம் கோச்சூகளை (சுற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பெட்டி) இணைத்து இயக்கும் போது புனலுார், செங்கோட்டை மலைகளின் அழகையும், பாம்பன் கடலின் அழகையும் ஒரு சேர கண்டு ரசிக்க முடியும். இதனால் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
மேலும் மதுரை--ராமேஸ்வரம் இடையே மேலும் ஒரு தினசரி விரைவு ரயில் சேவை புதிதாக கிடைக்கும் என்றனர்.

