பழைய ஓய்வூதிய திட்டம் வருமா? உரிய நேரத்தில் தெரியும்: அமைச்சர்
பழைய ஓய்வூதிய திட்டம் வருமா? உரிய நேரத்தில் தெரியும்: அமைச்சர்
ADDED : ஏப் 23, 2025 12:13 AM
சென்னை:''பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுமா என்பது குறித்து முதல்வருடன் பேசி, உரிய நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும்,'' என, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:
அ.தி.மு.க., - மரகதம் குமரவேல்: மதுராந்தகத்தில் சார் கருவூலம் கட்டடம் பழுதடைந்ததால், வாடகை கட்டத்தில் இயங்குகிறது. அங்கு, ஆறு பணியிடங்களில் மூன்று காலியாக உள்ளன.
லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் நம்பிக்கை வைத்து, உங்களை ஆட்சியில் அமரவைத்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படுமா?
அமைச்சர் தங்கம் தென்னரசு: மதுராந்தகம் சார்நிலை கருவூலம், பாரம்பரிய கட்டடத்தில் இயங்கியது. அது, தற்போது வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. புதிய கட்டடம் கட்ட, வருவாய் துறை நிலம் கிடைத்துள்ளது.
பொதுப்பணித் துறை வாயிலாக விரிவான திட்ட அறிக்கை பெற்ற பின், கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு போதிய பணியாளர்களை, முன்னுரிமை அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
அரசு ஊழியர்கள் நலனில், முதல்வர் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். அந்த வகையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை அரசு மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு தேவையான அறிவிப்புகள், பட்ஜெட்டில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் இருக்கின்றன.
ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய, அரசு செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு கால வரையறையும் செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களை அழைத்து, நானும், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவும் பேசினோம். முதல்வருடன் பேசி, உரிய நேரத்தில், இவ்விஷயத்தில் சரியான முடிவுகளை அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.