தென்பெண்ணை ஆறு சுத்திகரிப்புக்கு கர்நாடகாவை வலியுறுத்துமா தமிழக அரசு?
தென்பெண்ணை ஆறு சுத்திகரிப்புக்கு கர்நாடகாவை வலியுறுத்துமா தமிழக அரசு?
ADDED : ஜூலை 02, 2025 01:37 AM
ஓசூர்:கர்நாடகாவில் இருந்து கழிவுநீரை மட்டுமே தென்பெண்ணை ஆறு சுமந்து வருகிறது. அதனால், அம்மாநிலத்திலுள்ள சுத்திகரிப்பு நிலையங்களை, முழு வீச்சில் பயன்படுத்த, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, 112 கி.மீ., துாரம் பயணித்து, சிங்கசாதனப்பள்ளி வழியாக, தமிழக எல்லைக்குள் நுழைகிறது. ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் நீர் சேமிக்கப்பட்டு, உபரி நீர் மட்டுமே கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், கடலுார் வழியாக, 430 கி.மீ., துாரம் பயணிக்கும் தென்பெண்ணை ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் போது, அம்மாநில தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் சுத்திகரிப்பு செய்யப்படாமல், அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகின்றன.
அதனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் உபரி நீரை வெளியேற்றும் போது, ரசாயன நுரை ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.
இந்த விவகாரம் குறித்து, பசுமை தீர்ப்பாயம் நேரடியாக தலையிட்டு, விசாரணை நடத்தி வருகிறது. வழக்கமாக மழைக்காலங்களில் தான், கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் அதிகமாக வரும். சமீப நாட்களாக கழிவுநீர் மட்டுமே தென்பெண்ணை ஆற்றில் வருவதாக, விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்த நீரை தான், கெலவரப்பள்ளி அணையின் வலது, இடது பாசன கால்வாய் விவசாயிகள் பயன்படுத்தி, 8,000 ஏக்கரில் விவசாயம் செய்கின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரும், குப்பை குவியல்களும் தான் காட்சியளிக்கின்றன. ஆற்று நீர் விவசாய மற்றும் மக்கள் தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
கர்நாடகாவில், 17 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அதன் மூலமாக ஒரு நாளைக்கு, 479 எம்.எல்.டி., நீரை சுத்திகரித்து வழங்கலாம்.
ஆனால், அம்மாநில அரசு, அதை செய்வதாக தெரியவில்லை. அதனால் தான், கழிவுநீர் அதிகளவில் வருகிறது. எனவே, கர்நாடகா மாநில அரசிற்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என, விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தென்பெண்ணை ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்ய, 17 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கர்நாடகாவில் உள்ளன. புதிதாக, 225 எம்.எல்.டி., நீரை சுத்திகரிப்பு செய்ய, 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படுகின்றன.
'இதுதவிர, 313 எம்.எல்.டி., நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில், 10 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், கனமழை காலங்களில், நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வருகிறது' என்றனர்.