ADDED : செப் 05, 2025 02:11 AM
சென்னை: 'தமிழகத்திற்கு வர வேண்டிய செமிகண்டக்டர் நிறுவனங்களின் முதலீடுகளை, குஜராத், உத்தர பிரதேசத்திற்கு தள்ளிக்கொண்டு போகும் அரசியல் குறித்து, நயினார் நாகேந்திரன் கேள்வி கேட்காமல் இருப்பது ஏன்' என தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருவதை, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு பதிலளித்து, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பா.ஜ., ஆளும் மாநிலங்களை விட, தமிழகம் விஞ்சி வளர்கிறதே என்ற வயிற்றெரிச்சலில், தமிழகத்தை அவமதிப்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறார் நாகேந்திரன். அவர், உ.பி., மாடலை துாக்கி வந்திருக்கிறார்.
உ.பி., அரசுடன், 2022 டிசம்பரில் 7.12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 149 ஒப்பந்தங்களை, அமெரிக்கா, பிரிட்டன் நிறுவனங்கள் கையெழுத்திட்டதாக கூறுகிறார். அப்படி எந்த ஒரு நிறுவனமும் உ.பி.,யில் துவக்கவில்லை.
கடந்த ஏப்ரலில் உ.பி., அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில், 38 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக கூறினாலும், அதன் மீது எந்த முன்னேற்றமும் இல்லை.
தமிழகத்தில், 2024 ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில், 80 சதவீத ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு வர வேண்டிய 'செமிகண்டக்டர்' முதலீடுகளை, குஜராத், உ.பி.,க்கு தள்ளிக்கொண்டு போகும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு கேள்வி கேட்காமல் இருப்பது, தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் செய்யும் துரோகம் இல்லையா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.