சமையல் கலைஞர் மீது நடவடிக்கை போலீசுக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை
சமையல் கலைஞர் மீது நடவடிக்கை போலீசுக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை
ADDED : நவ 05, 2025 01:08 AM

சென்னை: 'ஆடை வடிவமைப் பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது' என, ஒப்புக்கொண்ட, மாதம்பட்டி ரங்கராஜ் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க, காவல் துறைக்கு, மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது .
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ்; இவர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல்துறையிலும், மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். இருவரிடமும் விசாரணை நடத்திய பின், ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும், அவருக்கு பிறந்த குழந்தை தன்னுடையது தான் என்பதையும், மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணையின் போது ஒப்புக் கொண்டார்.
எனவே, டி.என்.ஏ., பரிசோதனை தேவையில்லை. ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தையை சட்ட விரோதமானது என்றோ, முறைகேடானது என்றோ கூற முடியாது.
இந்த குழந்தையை பராமரிக்க வேண்டியது ரங்கராஜின் பொறுப்பு. வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்பை அவர் மறுக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் குழந்தையின் பிறப்பு சான்றிதழை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜாய் கிரிசில்டா, குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்று குறிப்பிட்டுள்ளார்.

