சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை; மகளிர் ஆணைய உத்தரவுக்கு தடை
சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை; மகளிர் ஆணைய உத்தரவுக்கு தடை
ADDED : நவ 21, 2025 06:38 AM

சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி, மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தற்போதைய ராஜ்யசபா எம்.பி.,யுமான சி.வி.சண்முகம், சில மாதங்களுக்கு முன், விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த பிரமிளா, ராதிகா ஆகியோர், மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரை விசாரித்த ஆணையம், சண்முகத்துக்கு, 'சம்மன்' அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகவில்லை எனக் கூறி, அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி, டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம், நவ., 11ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சண்முகம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ், அய்யப்பராஜ் ஆஜராகி, 'ஓராண்டுக்கு மேல் சென்னையில் எந்த கூட்டத்திலும் பங்கேற்று பேசாத நிலையில், சென்னையைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின்படி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எந்த கூட்டத்திலும் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை.
'அக்., 28ம் தேதி ஆஜராக கூறி அனுப்பிய சம்மன், முந்தைய நாள் தான் கிடைத்தது. வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவிட, மகளிர் ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது என்பதால், அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றனர்.
காவல் துறை தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, ''மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்து விட்டதால், இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல. இது சம்பந்தமான விபரங்களை பெற்று சரிபார்க்க வேண்டியுள்ளதால், அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த மனு குறித்து விளக்கம் அளிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும் மகளிர் ஆணைய உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

