ADDED : நவ 20, 2024 12:35 AM
சென்னை:தமிழகத்தில், கடலோர வளங்களை பாதுகாக்கும் திட்டத்தை, 'டி.என்.ேஷார்' முகமை வாயிலாக, 1,650 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு, உலக வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு உட்பட, 14 கடலோர மாவட்டங்களில், 1,076 கி.மீ., கடலோர பகுதிகள் உள்ளன. நாட்டில் குஜராத்திற்கு அடுத்து, தமிழகம் தான் நீளமான கடலோர பகுதியை உடையது.
கடலோர பகுதிகளில் காணப்படும் அதிக மாசு உள்ளிட்டவை காரணமாக, கடல் வளங்களும், அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கடல் வளங்களை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் அரசு திட்டம் வகுத்துள்ளது. கடலோர பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம், பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதார மேம்பாடு, மாசு கட்டுப்பாடு போன்ற பணிகளை, இத்திட்டம் முக்கிய நோக்கமாக கொண்டது.
மேலும், சதுப்பு நிலங்கள், பவளப் பாறைகளை மீட்டெடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் அனைத்தையும், 1,650 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, 'டி.என்.ேஷார்' முகமையை அரசு துவங்க உள்ளது.
கடலோர வளங்களை பாதுகாப்பதற்கு தேவைப்படும் நிதியை பெற உலக வங்கியுடன், அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில், உலக வங்கி, தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் முதல், கடலோர வளங்களை பாதுகாக்கும் பணிகளை துவங்க அரசு திட்டமிட்டு உள்ளது.

