சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகியும் ஏற்காட்டில் சாலை இல்லை: அண்ணாமலை
சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகியும் ஏற்காட்டில் சாலை இல்லை: அண்ணாமலை
ADDED : ஜன 03, 2024 11:45 PM
வாழப்பாடி:''சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளை கடந்தும், ஏற்காடு பகுதியில் சில இடங்களில் சாலை இல்லாத கிராமங்கள் உள்ளன,'' என பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையை துவங்கினார்.
அங்கிருந்து பேளூர் பழைய பஸ் ஸ்டாப் வரை நடந்து சென்று, மக்களை சந்தித்தார். மதியம் 2:20க்கு துவங்கிய யாத்திரை, மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.
இதில் அப்பகுதி மக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அண்ணாமலைக்கு சால்வை அணிவித்தும், நினைவு பரிசு, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கியும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இளைஞர்கள் பலர், அவருடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
பின், அண்ணாமலை பேசியதாவது:
சேலத்தில் இருந்து ஓமலுார், மேட்டூர் அணை பகுதிக்கு, ரயில் வழியை இருவழி பாதையாக மாற்றக்கூடிய திட்டம், திருச்சியில் இருந்து துவங்கப்பட்டுள்ளது.
தண்ணீர் வசதி இல்லை
நம் ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கு இடமில்லை. சுதந்திரம் கிடைத்து, 75 ஆண்டுகளை கடந்தும், ஏற்காடு பகுதியில் சில இடங்களில் சாலை இல்லாத கிராமங்கள் உள்ளன. சேர்வராயன் மலையில் தண்ணீர் வசதி இல்லை.
தமிழகத்தில் ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி இல்லாமல் உள்ளது. ஒரே குடும்பம் கொள்ளையடிக்க, அரசவையில் அமர்ந்துள்ளது. அரசு பதவியில் அவர்களே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். எப்படி மாற்றம் வரும்? இது தான் உண்மையான சமூக நீதியா?
'நம்பர் ஒன்' மாநிலம் என முதல்வர் தெரிவிக்கிறார். ஆனால், 8,34,544 கோடி ரூபாய் இன்றைய தமிழக கடன். கடன் வாங்குவதில் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிவிட்டார்.
இன்று சென்னையில் வெள்ள நிவாரணம், 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அங்கு, தி.மு.க.,வினர், பெண்களிடம் சென்று அந்த பணத்தை காட்டச் சொல்லி, 'செல்பி' எடுத்து, 'எங்கள் தளபதி பணம் கொடுத்துள்ளார்' என தெரிவிக்கின்றனர்.
உங்கள் வங்கி கணக்குக்கு, 8.50 கோடி ரூபாய் பிரதமர் அனுப்பியுள்ளார்; யாருக்காவது தெரியுமா? 'செல்பி' எடுத்தோமா?
விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய் வருகிறது; தண்டோரா போட்டோமா? 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு, சத்தமின்றி உங்கள் கையில் உள்ளது. இது உங்கள் பணம்; சத்தமின்றி கொடுக்கிறோம்.
வேண்டுகோள்
பொன்முடி மகன் என்ற ஒரே தகுதியில், கவுதம சிகாமணி, எம்.பி., ஆகியுள்ளார். அவருக்கு ஒரு தீர்ப்பு வந்துவிட்டது. மற்றொரு தீர்ப்பும் வந்தால், கள்ளக்குறிச்சிக்கு வேகமாக, தேர்தல் நடத்த வேண்டிய நிலை வரும்.
உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இம்முறை கட்சியை பார்க்காமல், மோடியை மட்டும் பார்த்து ஓட்டு போடுங்கள். பேளூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்றனர். உங்களுக்கு அனுமதி கிடைக்க, நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், தரிசனம் செய்தார். இதில், கட்சி முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.