ADDED : ஜன 30, 2025 10:06 PM
சென்னை:அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் இ.சி.ஆர்., சாலையில் காரில் பெண்களை துரத்தி சென்ற சம்பவங்களை மையப்படுத்தி, 'அன்று சார், இன்று கார்; தி.மு.க., ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு' என தமிழக பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.
பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலை மாணவி ஒருவருக்கு சமீபத்தில், பாலியல் வன்முறை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில், தி.மு.க.,வை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஞானசேகரன், 'சார்' என்று ஒரு நபரை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சார் யார் என்று கேட்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், பா.ஜ., தான் களத்தில் இறங்கி போராடியது. அ.தி.மு.க.,வினர் சென்னையில் ஒரு வணிக வளாகத்திலும், சட்டசபையில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், 'யார் அந்த சார்' கேள்வி எழுப்பி பதாகைகளை கையில் ஏந்தி போராடினர். அதன்பின், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதுவரை, ஞானசேகரன் தி.மு.க.,வை சேர்ந்தவன் இல்லை என மறுத்து வந்த அக்கட்சியினர், தி.மு.க., அனுதாபி என்று ஒப்புக் கொண்டனர்.
சென்னை இ.சி.ஆர்., சாலையில் இம்மாதம், 25ம் தேதி அதிகாலை, 2:00 மணியளவில் தி.மு.க., கொடிகட்டிய இரண்டு கார்களில் சென்ற வாலிபர்கள், மற்றொரு காரில் சென்ற பெண்களை மின்னல் வேகத்தில் துரத்தி சென்று, ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்திலும் தி.மு.க., கொடி கட்டி காரில் சென்ற இளைஞர்களை, கைது செய்ய வலியுறுத்தி, 'அன்று சார், இன்று கார்; தி.மு.க., ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு' என, தமிழக பா.ஜ., சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

