'கவின்கேர்' - எம்.எம்.ஏ., சின்னிகிருஷ்ணன்' இன்னோவேஷன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
'கவின்கேர்' - எம்.எம்.ஏ., சின்னிகிருஷ்ணன்' இன்னோவேஷன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 05, 2025 03:26 AM
சென்னை: 'கவின்கேர்' நிறுவனம், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் உடன் இணைந்து, திறன்மிக்க தொழில் முனைவோரை அடையாளம் காண, சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகள் 2025, 14வது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கு, 2023 - 24ல், 50 கோடி ரூபாய்க்கு மிகாமல் வருவாய் ஈட்டியுள்ள, புதுமையான பிசினஸ் மாடல்களை கொண்டிருக்கும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், 'www.ckinnovationawards.in' இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது, 91 63746 03433 என்ற எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்து, தேவையான விபரங்களை வழங்கலாம்.
விண்ணப்ப பதிவுகளை சமர்ப்பிக்க, வரும் ஜூலை 1 கடைசி நாள். ஒவ்வொரு ஆண்டும் கவின்கேர் நிறுவனம், 'சாச்செட்களின் தந்தை' என அழைக்கப்படும், மறைந்த ஆர்.சின்னிகிருஷ்ணனின் நினைவை போற்றி, திறன்மிக்க தொழில் முனைவோரை கண்டறிந்து, அவர்களின் புதுமையான தயாரிப்புகள், சேவைகளின் தனித்தன்மை, நிலைத்தன்மை மற்றும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை கருத்தில் வைத்து, விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இது குறித்து, கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.கே.ரங்கநாதன் கூறியதாவது:
சின்னிகிருஷ்ணன் இன்னோவேஷன் விருதுகள், அன்றாட வாழ்வில் அர்த்தமுள்ள தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்த கூடியவை. இவ்விருதுகள் திறமையான தொழில் முனைவோர்களின், புதுமைகளை ஊக்குவிப்பதை, தனது மைய கொள்கையாக கொண்டுள்ளது.
மரபுகளுக்கு எதிராக சிந்திக்க துணியும், சமூக முன்னேற்றத்திற்கான தெளிந்த கனவையும் கொண்ட, தொழில் முனைவோரை கண்டறிந்து, விருது வழங்கப்படுகிறது.
இது, எதிர்கால மாற்றத்திற்கான முன்னோடிகளை உருவாக்கும் உறுதியான தொடக்க மேடையாகவும், ஊக்குவிக்கும் ஒரு வலுவான தளமாகவும் திகழ்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

