வாலிபரை துப்பாக்கியால் சுட்டு பீஸ் பீஸாக வெட்டியோர் கைது: கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரம்
வாலிபரை துப்பாக்கியால் சுட்டு பீஸ் பீஸாக வெட்டியோர் கைது: கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரம்
ADDED : பிப் 03, 2024 08:35 AM

குன்றத்துார் அருகே சிறுகளத்துார் பகுதியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு, 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் முண்டமாக ஏரியில் மிதப்பதாக, குன்றத்துார் போலீசாருக்கு டிச., 30ம் தேதி தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடல் மற்றும் இரு கால்களை மீட்ட நிலையில் தலை, கைகளை ஏரியில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், கொலையானவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து, தனிப்படை அமைத்து, காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் பூமிநாதன், 34, என்பவரை காணவில்லை என, அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
விசாரணையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அணிந்திருந்த டி-சர்ட் அடையாளத்தை வைத்து, அது பூமிநாதன் என, அவரது பெற்றோர் உறுதிப்படுத்தினர். பூமிநாதனின் மொபைல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, கடைசியாக செம்பரம்பாக்கம் ஏரி அருகே இணைப்பு துண்டிக்கப்பட்டதும், குன்றத்துார் அருகே சிறுகளத்துார் பகுதியைச் சேர்ந்த பிலிப்குமார் என்பவரிடம் பேசியதும் தெரிந்தது.
குன்றத்துார் போலீசார் பிலிப்குமாரை பிடித்து விசாரித்த போது, நண்பருடன் சேர்ந்து பூமிநாதனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் மேலும் கூறியதாவது-: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காவலாளியாக பணியாற்றும் நாகலட்சுமி, 32, என்ற பெண்ணுடன், பிலிப்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதன் பின், அங்கு பணியாற்றிய காவலாளி பூமிநானுடன் பழக்கம் ஏற்பட்டு, நாகலட்சுமி அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால், பூமிநாதனுக்கும் பிலிப்குமாருக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிலிப்குமார் தன் நண்பர் விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து, பூமிநாதனை மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரிக்கரைக்கு அழைத்து வந்து, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். போலீசார் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக பூமிநாதன் தலை, கை, கால்களை தனித்தனியாக வெட்டி உடல், காலை செம்பரம்பாக்கம் ஏரியில் வீசியுள்ளனர். தலை மற்றும் கையை, வண்டலுார் அருகே முடிச்சூர் ஏரியில் வீசியுள்ளனர். இவ்வாறு, போலீசார் கூறினர்.
இதையடுத்து, முடிச்சூர் ஏரியில் இருந்த தலை, கையை மீட்ட போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட பிலிப்குமார், விக்னேஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் வேறு காரணங்கள் உள்ளதா என விசாரிக்கின்றனர்.
சொத்துக்காக தம்பியை தீர்த்துக்கட்டிய அண்ணன்
சென்னை, மாதவரம், நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் நரேஷ்குமார், 33. இவரது தம்பி விக்னேஷ்குமார், 30. இவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுனர்கள். இவர்களது பூர்வீக சொத்தான சிறிய வீட்டை விற்க முடிவு செய்தனர். அதற்காக, ஒருவரிடம் 1 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றனர். வீட்டை விற்று வரும் பணத்தை பிரிப்பது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், ஆத்திரமடைந்த நரேஷ்குமார், அங்கிருந்த கடப்பாரையால் தம்பியை ஆவேசமாக தாக்கியதோடு, மயங்கி விழுந்தவரை கத்தியால் குத்தினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ்குமார் நேற்று அதிகாலை உயிரிழந்தார். மாதவரம் போலீசார், நரேஷ்குமாரை கைது செய்தனர்.
12 ஆண்டாக மனைவியை பூட்டி வைத்த கணவர் கைது
கர்நாடக மாநிலம், மைசூரு அருகேயுள்ள கிராமத்தில் வசிப்பவர் சன்னாலய்யா, 45. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு மனைவியர் இருந்தனர். இவர்கள், கணவரின் கொடுமை தாங்காமல் பிரிந்து சென்று விட்டனர். இதன்பின், சுமா, 32, என்பவரை 12 ஆண்டுகளுக்கு முன், சன்னாலய்யா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான நாளில் இருந்தே, மனைவியின் நடத்தையை சந்தேகிக்க துவங்கினார். அக்கம், பக்கத்தினருடன் பேச விடவில்லை. வீட்டு ஜன்னலையும் மூடியே வைத்திருப்பார். சந்தேக புத்தி காரணமாக, மனைவியை வெளியே விடாமல் வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்தார். தினமும் சித்ரவதை செய்தார்.
பணிக்கு செல்லும்போது, மனைவியை வீட்டிற்குள் வைத்து பூட்டி சென்று விடுவார். வீட்டுக்குள் கழிப்பறையும் கிடையாது. எனவே, இயற்கை உபாதைகளை கழிக்க, மனைவி அறைக்குள் பக்கெட் வைத்திருந்தார். இரவு யாருக்கும் தெரியாமல், தானே பக்கெட்டை வெளியே எடுத்து வந்து சன்னாலய்யா சுத்தம் செய்வார். இதையறிந்து கேள்வி எழுப்பிய அக்கம் பக்கத்தினரை கொலை செய்வதாக மிரட்டினார்.
கிராமத்து பெரியவர்கள் அறிவுரை கூறியும், சன்னாலய்யா திருந்தவில்லை. இந்த விஷயம், கிராமத்தில் வசிக்கும் வக்கீல் சித்தப்பாஜிக்கு தெரிந்தது. அவர், போலீஸ் நிலையத்துக்கு தகவல் கூறினார். நேற்று முன்தினம் இரவு போலீசார் வந்து, வீட்டின் பூட்டை உடைத்து சுமாவை மீட்டனர். அவரது பெற்றோரை வரவழைத்து, அவர்களுடன் அனுப்பி வைத்தனர். மனைவியை சிறை வைத்திருந்த சன்னாலய்யாவையும் கைது செய்தனர்.
திருநங்கை கொலையில் சென்னை நபர் கைது
கோவை, தெலுங்குபாளையம், எல்.ஐ.சி., காலனியை சேர்ந்தவர் திருநங்கை தனலட்சுமி, 39; கோவையில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன் மும்பை சென்றார். இவருக்கு, மருதமலை அடிவாரம், அன்னை இந்திரா நகரில் உள்ள திருநங்கை மாசிலாமணி, 33, உடன் பழக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன், மும்பையில் இருந்து திரும்பிய தனலட்சுமி, மாசிலாமணி வீட்டில் தங்கினார்.
கடந்த, 29ம் தேதி இரவு தனலட்சுமியை வீட்டில் விட்ட மாசிலாமணி, அவரது நண்பர் மணி என்பவரோடு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது, தனலட்சுமி, 27 இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். வடவள்ளி போலீசார் நான்கு தனிப்படை அமைத்து கொலையாளியை தேடினர். 'சிசிடிவி' கேமராவில் சந்தேகத்துக்குரிய ஒருவர் நடமாடுவது தெரிந்தது.
விசாரணையில், அவர், சென்னை, புழுதிவாக்கத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியர் தினேஷ் கந்தசாமி, 38, என்பதும், ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிந்தது. மதுரையில் பதுங்கி இருந்த அவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தினேஷ் கந்தசாமி, அடிக்கடி மருதமலை முருகன் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்திக்கு வந்த போது, அவரை ஒரு கும்பல் தாக்கி, பணம் பறித்து உள்ளது. அக்டோபரில் மருதமலை வந்த தினேஷ், அந்த கும்பலை தேடிய போது, மணி, மாசிலாமணி அவரிடம் தகராறு செய்து, தினேஷ் மற்றும் அவரது பெற்றோரை தாக்கி உள்ளனர்.
இதனால் தினேசுக்கு மாசிலமாணி மீது கோபம் ஏற்பட, 29-ம் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்த அவர், மாசிலாமணி வீட்டுக்கு சென்று, அங்கு தனியாக படுத்திருந்த தனலட்சுமியை, மாசிலாமணி என நினைத்து வெட்டிக் கொன்றார். பின் பழனியில் மொட்டை போட்டு மதுரை தப்பினார். தனிப்படை போலீசார், அவரை கைது செய்தனர். தான் கைதான பின்னரே ஆளை மாற்றிக் கொன்றது தினேசுக்கு தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வீடியோ எடுத்தவரை தாக்கிய போலீசார் மாற்றம்
திருச்சி மாவட்டம், முசிறி கீழத்தெருவைச் சேர்ந்தவர் சுரேந்திரன், 35. இவர் நேற்று முன்தினம் மதியம், முசிறி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பாரில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு, முசிறியில் பணியாற்றும் முருகானந்தம், அண்ணாமலை, கார்த்திக் ஆகிய மூன்று போலீசாரும் மது குடிக்க வந்தனர். முருகானந்தத்துக்கும், சுரேந்திரனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இதனால், மூன்று போலீசாரும் மது குடிப்பதை சுரேந்திரன் வீடியோ எடுத்தார்.
இதை பார்த்த போலீஸ்காரர் முருகானந்தம், அவரை தாக்கி, மொபைல் போனை பிடுங்கிச் சென்று விட்டார். காயமடைந்த சுரேந்திரன், முசிறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த திருச்சி எஸ்.பி., வருண்குமார், மதுபான பாரில் தரக்குறைவாக நடந்து கொண்ட முருகானந்தம், கார்த்திக், அண்ணாமலை ஆகிய மூன்று போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
திருநெல்வேலி மாவட்டம் மானுார் அருகே சுண்டங்குறிச்சி வி.ஏ.ஓ., அருணாச்சலம். தண்ணீர் பன்னீரூத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகையா 62 ,என்பவர் தனது நிலத்தை மனைவி பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். அந்தப் பணியை முடிக்க வி.ஏ.ஓ., ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
நேற்று வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வைத்து சண்முகையாவிடம் ரூ .5 ஆயிரம் வாங்கிக் கொண்டு பெயர் மாற்றப்பட்ட பட்டாவை அருணாச்சலம் கொடுத்தார். அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ.,வை கைது செய்து சிறையிலடைத்தனர். சுத்தமல்லியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

