த.வெ.க., மாநாட்டில் என்னை தான் துாக்கி வீசினர் இளைஞர் வீடியோவால் பரபரப்பு
த.வெ.க., மாநாட்டில் என்னை தான் துாக்கி வீசினர் இளைஞர் வீடியோவால் பரபரப்பு
ADDED : ஆக 30, 2025 07:04 AM

திருவெண்ணெய்நல்லூர்: த.வெ.க., மாநாட்டில் பவுன்சர்கள் என்னை தான் தூக்கி வீசினார்கள் என திருவெண்ணெய்நல்லூர் வாலிபர் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
த.வெ.க., 2வது மாநில மாநாடு கடந்த 21ம் தேதி மதுரையில் நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் தொண்டர்களை சந்திப்பதற்காக ஸ்டேஜ் முன்னாள் 300 மீ., அளவில் நடைமேடை அமைக்கப்பட்டது. நடைமேடையில் நடந்தபடி விஜய் தொண்டர்களை சந்தித்த நிலையில் பலர் ஆர்வம் மிகுதியால் நடமேடை மீது ஏறி விஜயை நெருங்க முயன்றனர்.
அப்போது விஜயின் பவுன்சர்கள் தொண்டர்களை தடுத்து துாக்கி வீசினர். அக்காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையொட்டி, 'பவுன்சர்கள் என்னை தான் தூக்கி வீசினர். இதனால் எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது,' எனக் கூறி பெரம்பலூர் மாவட்டம், பெரியபாளையத்தை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் விஜய் உட்பட பவுன்சர்கள் மீது வழக்குப் பதிந்தனர்.
அதில் திடீர் திருப்பமாக உண்மையில் விஜயின் பவுன்சர்கள் என்னை தான் துாக்கி வீசினார்கள் எனக் கூறி விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கடந்த 21ம் தேதி மதுரையில் நடைபெற்ற த.வெ.க., மாநாட்டில் கலந்து கொள்ள நண்பர்களுடன் வேனில் பயணம் செய்தேன். அன்றைய தினம் காலையிலேயே மேடைக்கு அருகே சென்றேன்.
கட்சி தலைவர் விஜயை பார்த்தவுடன் ஆர்வம் மிகுதியில் நடைமேடை மீது ஏறினேன். அவர் அருகே செல்ல முயன்ற போது அங்கிருந்த பவுன்சர்கள் என்னை தூக்கி வீசினர்.
நான் கம்பியை பிடித்தவாறு தொங்கினேன். அருகில் இருந்த நண்பர்கள் உடனடியமாக மீட்டனர்.
எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அதற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. இதனை எங்கு வேண்டுமென்றால் நிரூபிக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது அஜய் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

