ADDED : செப் 05, 2024 12:03 AM

சியோல் வடகொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளை தடுக்கத் தவறிய 30 அதிகாரிகளுக்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு ஆசியாவில் உள்ள வடகொரியா, மர்மம் நிறைந்த நாடு. அங்கே என்ன நடக்கிறது என்று வெளி உலகத்துக்கே முழுமையாக தெரியாது. கிம் ஜாங் உன், 40, அதிபர் பதவியில் இருக்கிறார். அவர் சர்வாதிகாரி. அவரை கேள்வி கேட்கும் அதிகாரம் எவருக்கும் கிடையாது.
கொரோனா தொற்று
கொரோனா கால கட்டத்தில், உலகம் முழுதும் தொற்று பரவி லட்சக்கணக்கான மக்கள் மரணம் அடைந்தபோது, வடகொரியாவில் நோயின் பாதிப்பு குறித்த ஒரு தகவல் கூட வெளிவரவில்லை.
சீனா மட்டுமே வட கொரியாவுக்கு நெருக்கமான நாடு என நம்பப்படுகிறது. அதிபர் கிம் எதை பற்றியும் கவலைப்படாமல், அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்டவற்றை அச்சுறுத்தும் வகையில், அவ்வப்போது அணு ஆயுதச் சோதனையும் நடத்தி வருகிறார். அமெரிக்காவை அவ்வப்போது மிரட்டுவதும் அவருக்கு வாடிக்கை.
இந்நிலையில், வட கொரியாவில் மழையால் நேர்ந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளை தடுக்கத் தவறியதற்காக, 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மழை பெய்தது ஜூலை மாதத்தில். சினுய்ஜு, உய்ஜு ஆகிய நகரங்களில், 4,000 வீடுகள், கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை வெள்ளம் சூழ்ந்ததாக, வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்தது.
1,000 பேர் பலி
பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துகளில், 1,000 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 15,000க்கும் மேற்பட்டோர், தலைநகர் பியோங்யாங்கில் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் கிம் நேரில் பார்வையிட்டார். ஓய்வு எடுக்காமல் நிவாரணப் பணிகளை நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
எனினும், வெள்ளத்தால் ஆயிரக்கணக்கில் பலி ஏற்பட்டதாக வெளியான செய்திகளை கிம் மறுத்தார்.
இது, நம் நாட்டுக்கு சர்வதேச அளவில் இருக்கும் நல்ல பெயரை கெடுக்க, வழக்கம் போல மேலை நாடுகளும், தென் கொரியாவும் கைகோர்த்து பரப்பும் வதந்திகள் என அவர் குற்றஞ்சாட்டினார்.
அதிகாரிகள் பீதி
நிவாரணப் பணிகள் முடிந்தபின் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கிம், அதிகாரிகள் தமது கடமையை செய்ய தவறியதாலும், லஞ்ச பணத்துக்கு ஆசைப்பட்டு ஊழல் செய்ததாலுமே மழை வெள்ள பாதிப்பை தடுக்க முடியாமல் போயிற்று என குறிப்பிட்டார்.
தவறு செய்த அதிகாரிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றும் எச்சரித்தார். அதிலிருந்தே அதிகாரிகள் பீதியில் உறைந்திருந்தனர்.
ஊழல் செய்த மற்றும் கடமை தவறிய அரசு அதிகாரிகள் 30 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஆகஸ்ட் இறுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
தண்டனைகளை பொதுமக்கள் பார்க்கும் வகையில் பகிரங்கமாக நிறைவேற்ற வேண்டும் என்பது தான் கிம் பின்பற்றும் கொள்கை. அப்படி செய்தால் மட்டுமே மற்றவர்கள் மனதில் பயம் உண்டாகும்; தவறு செய்ய தயங்குவர் என்பார்.
மரண தண்டனை
கண்களை கட்டி நிற்க வைத்து சுட்டுக் கொல்வது, மேடை மேல் ஏற்றி துாக்கில் போடுவது என பல வழிகளில் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
முப்பது அதிகாரிகளும் ஒரே பாணியில் கொல்லப்பட்டனரா என்பது தெரியவில்லை. அதிகாரிகள் தண்டிக்கப்பட்ட தகவலை, தென் கொரியாவின் 'சோசன் டிவி' உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
வடகொரியா ஊர்ஜிதம் செய்யாமலும், மறுக்காமலும் வழக்கம் போல மவுனம் காக்கிறது. ஆப்கானிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா, சோமாலியா ஆகிய நாடுகளிலும் பகிரங்கமாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
வட கொரியாவில் ஆண்டுக்கு, 100 பேர் வாழ்க்கை அந்த வழியில் முடிகிறது.