பாக்.,கில் இருவேறு விபத்துகள் யாத்ரீகர்கள் உட்பட 40 பேர் பலி
பாக்.,கில் இருவேறு விபத்துகள் யாத்ரீகர்கள் உட்பட 40 பேர் பலி
ADDED : ஆக 26, 2024 02:49 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில், 11 யாத்ரீகர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூர் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் 70 பேர், அண்டை நாடான ஈரானுக்கு பஸ்சில், புனித பயணம் சென்று விட்டு, நேற்று திரும்பிக்கொண்டிருந்தனர்.
பஞ்சாப் மாகாணத்தின் மாக்ரான் கடற்கரை நெடுஞ்சாலை வழியே பஸ் வந்தபோது, திடீரென அருகேயுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் வந்த 11 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; 35 பயணியர் காயம் அடைந்தனர்.
போலீசார் மற்றும் மீட்புபடையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் சிக்கியவர்கள் பெரும்பாலும் லாகூர், குஜ்ரன்வாலா பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சதானோதி மாவட்டத்தை சேர்ந்த 35 பேர் நேற்று பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
மலைப்பகுதியில் சென்றபோது திடீரென அந்த பஸ், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 29 பேர் பலியாகினர்; மூன்று பேர் காயம் அடைந்தனர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இரு விபத்துகளிலும் மொத்தம், 40 பேர் உயிரிழந்துள்ளனர்.