'அருணாச்சல் இந்திய பகுதியே': அமெரிக்கா திட்டவட்டம்
'அருணாச்சல் இந்திய பகுதியே': அமெரிக்கா திட்டவட்டம்
UPDATED : மார் 22, 2024 10:25 AM
ADDED : மார் 22, 2024 01:28 AM

வாஷிங்டன்: நம் நாட்டின் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அங்கீகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை, அதை ஒட்டி அமைந்துள்ள நம் அண்டை நாடான சீனா, பல ஆண்டுகளாக உரிமை கோரி வருகிறது.சீனாவின் இந்த நடவடிக்கையை பலமுறை நிராகரித்துள்ள மத்திய அரசு, அது நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையான, சேலா சுரங்கப் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அங்கு பிரதமர் சென்றதற்கு கண்டனம் தெரிவித்த சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் சீனியர் கலோனல் ஜாங் ஜியோங், அருணாச்சல பிரதேசம் தங்களுக்கே சொந்தமானது என மீண்டும் உரிமை கோரினார்.
இந்நிலையில், இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை இணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், ''அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
''அந்த பிராந்தியத்தின் மீது உரிமை கோரும் நடவடிக்கையாக, எல்லை கட்டுப்பாடு கோடு அருகே நடக்கும் ஆக்கிரமிப்பு, ராணுவ நடமாட்டம், பொதுமக்கள் ஊடுருவல் போன்ற முன்னெடுப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்,'' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அருணாச்சல பிரதேசத்தின் மீது உரிமை கோரும் சீனாவின் அறிக்கை மிகவும் அபத்தமானது. அது, இந்தியாவின் பகுதியாக இருந்தது; இருக்கிறது; இருக்கும்' என்று தெரிவித்திருந்தது.

