ADDED : பிப் 27, 2025 02:19 AM

சரஜெவோ: பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், போஸ்னியா ஹெர்சகோவினாவின் அதிபர் மிலோராட் டோடிக்குக்கு, ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து போஸ்னியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆறு ஆண்டுகள் அரசியலில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான போஸ்னியாவில், 1992ல் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. போஸ்னிக், செர்ப், குரோட் பழங்குடியின மக்கள் இடையே ஏற்பட்ட இந்த உள்நாட்டு போரில், ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். அமெரிக்காவின் முயற்சியால், 1995ல் போர் நிறுத்தப்பட்டு, உடன்பாடு ஏற்பட்டது.
டேடன் ஒப்பந்தம் என்ற அந்த ஒப்பந்தத்தின்படி, போஸ்னியா இரண்டு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டது. ரிபப்ளிகா ஸ்பார்ஸகா, போஸ்னியாக்குரோட் கூட்டமைப்பு என்று பிரிக்கப்பட்டது. இரண்டு பிராந்தியங்களுக்கும் தன்னாட்சி இருந்தாலும், ராணுவம், நீதித்துறை, வரி நிர்வாகம் பொதுவாக உள்ளது.
மேலும் அந்த ஒப்பந்தத்தின்படி, போஸ்னிக், செர்ப், குரோட் பூர்வகுடியின மக்கள் சுழற்சி முறையில் மூன்று ஆண்டுகளுக்கு அதிபர் பதவியில் இருப்பர். அந்த வகையில், ரஷ்யாவின் ஆதரவு பெற்ற, செர்ப் பிரிவினைவாதத் தலைவரான மிலோராட் டோடிக் தற்போது அதிபராக உள்ளார்.
நாட்டின் அமைதியை உறுதி செய்யும் சர்வதேச குழுவை மதிக்காமல், பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அவருக்கு, ஒரு ஆண்டு தண்டனை விதித்து, போஸ்னியா நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஆறு ஆண்டுகளுக்கு அவர் அரசியலில் ஈடுபடவும் தடை விதித்துள்ளது.
ஆனால், இந்த உத்தரவை மீறப்போவதாக டோடிக் கூறியுள்ளார். நாட்டில் இருந்து செர்ப் மக்கள் அதிகம் வசிக்கும் ரிபப்ளிகா ஸ்பார்ஸகாவை தனியாக பிரிக்கப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் உள்நாட்டு போர் ஏற்படுமோ என, போஸ்னியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அண்டை நாடான செர்பியாவில், தேசிய பாதுகாப்புக்கான கவுன்சிலின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.