2047க்குள் வளர்ந்த இந்தியா உருவாகும் நம்பிக்கை! ஜி - 7 உச்சி மாநாட்டில் மோடி உறுதி
2047க்குள் வளர்ந்த இந்தியா உருவாகும் நம்பிக்கை! ஜி - 7 உச்சி மாநாட்டில் மோடி உறுதி
ADDED : ஜூன் 15, 2024 02:11 AM

அபூலியா, ''வரும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்றுள்ளோம்,'' என, ஜி - 7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
உலகின் ஏழு முக்கிய வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் அடங்கியது, ஜி - 7 அமைப்பு.
இதன், 50வது ஆண்டு கூட்டம், ஐரோப்பிய நாடான இத்தாலியில் நேற்று முன்தினம் துவங்கி, இன்று வரை நடக்கிறது.
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவுக்கு, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தவிர, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, இந்தோ -- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 11 நாடுகளுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஐந்தாவது முறை
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, தன் முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலிக்குச் சென்றுள்ளார். ஜி - 7 அமைப்பின் கூட்டத்தில், இந்தியா 11 முறை பங்கேற்றுள்ளது. பிரதமர் மோடி தொடர்ந்து ஐந்தாவது முறையாக பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பல நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். மேலும், போப் பிரான்சிஸை சந்தித்து பேசினார்.
முன்னதாக மாநாட்டுக்கு வந்த பிரதமர் மோடியை, இரு கைகளை கூப்பி வணக்கம் கூறி வரவேற்றார் மெலோனி. இருவரும் சிறிது நேரம் பேசினர். இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த போப் பிரான்சிஸையும் மோடி சந்தித்தார்.
இருவரும் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். அதன்பின், போப் கைகளைப் பிடித்தவாறு, அவருடன் சிறிது நேரம் மோடி பேசினார். அவரை இந்தியா வரும்படியும் அழைப்பு விடுத்தார்.
முன்னதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை அவர் சந்தித்தார். அப்போது ராணுவம், அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும், இரு தரப்பு உறவுகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
ராணுவ ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், 'மேக் இன் இந்தியா' எனப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்வது தொடர்பாகவும், அவர்கள் விரிவாக பேசினர் என, வெளியுறவுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை அவர் சந்தித்து பேசினார். அடுத்த மாதத்தில் அங்கு பொதுத் தேர்தல் நடக்க உள்ளது.
இரு தரப்பு உறவுகள் குறித்தும், இந்தியா -- பிரிட்டன் விரிவான ஒத்துழைப்பு குறித்தும் பேசினர்.
குறிப்பாக, ராணுவ உற்பத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தொழில் மற்றும் வர்த்தகத்தில் அதிகம் ஒத்துழைப்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது இரு பிரதமர்கள் பேசினர்.
இரு தரப்பு தாராள வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடான உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது.
இதில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், அமைதி பேச்சு இன்றும், நாளையும் நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட பல நாடுகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில், இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் உக்ரைனில் உள்ள நிலவரம் குறித்து, ஜெலன்ஸ்கியுடன் மோடி பேசினார்.
துாதரக மற்றும் பேச்சு வாயிலாக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மோடி மீண்டும் வெளிப்படுத்தினார் என, நம் வெளியுறவுத் துறை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும், முயற்சிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதிஅளித்தார்.
முன்னதாக இத்தாலிக்கு நேற்று காலை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது. உலகத் தலைவர்களும் அவருடன் ஆர்வமுடன் பேசியதாக, வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளதற்காக பிரதமர் மோடிக்கு, அவரைச் சந்தித்த உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், துறைச் செயலர் வினய் குவாட்ரா ஆகியோரும் பிரதமருடன் சென்றுஉள்ளனர்.
பிரதமர் பேச்சு
ஜி - 7 மாநாட்டில் மோடி பேசியதாவது:
இந்தியாவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், என் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ஜனநாயகத்தின் வெற்றியாக பார்க்கிறேன். 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற முடிவில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.
'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவில் தேசிய அளவிலான திட்டத்தை உருவாக்கிய முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். அழிவுக்காக அதை பயன்படுத்த கூடாது.
தொழில்நுட்பத்தில் ஒரே நிறுவனம் அல்லது குழு ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். எரிசக்தி என்பது எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும், மலிவாகவும் மற்றும் ஏற்கத்தக்க வகையிலும் இருக்க வேண்டும்.
அதுவே எங்கள் நோக்கம். எரிசக்தி துறையில் இந்த நான்கு கொள்கைகளை இந்தியா அடிப்படையாக வைத்துள்ளது.
'நெட் ஜீரோ' எனப்படும் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான இலக்கை 2070க்குள் அடைய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.
உலகளாவிய போர் பதற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளின் தாக்கத்தை உலகின் தெற்கு நாடுகள் தாங்கி நிற்கின்றன.
கடந்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்று நடத்திய, 'ஜி - 20' மாநாட்டின் போது, ஆப்ரிக்காவை நிரந்தர உறுப்பினராக சேர்த்ததில் பெருமிதம் அடைகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.