ADDED : மே 01, 2024 02:17 AM
லண்டன், லண்டனில் தன், 19 வயது மனைவியை கத்தி யால் குத்தி கொலை செய்த, 24 வயது இந்தியருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசித்து வந்த, இந்தியரான சாஹில் சர்மா, தன் மனைவி மேஹக் சர்மாவைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்தாண்டு அக்டோபரில், போலீஸ் அவசர உதவி எண்ணுக்கு, சாஹில் சர்மா அழைத்துள்ளார். தன் மனைவியைக் கொலை செய்ததாக அவர் கூறினார்.
அதன்படி, அவருடைய வீட்டுக்கு போலீசார் வந்தபோது, மேஹக் சர்மா, கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சாஹில் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின்போது, எதற்காக கொலை செய்தார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. மேலும், நீதிமன்ற விசாரணையின்போது, தான் நிரபராதி என்று கூறினார்.
தீவிர விசாரணையில், தன் இளம் மனைவியை அவர் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டது. இதைஅடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 15 ஆண்டுகளுக்கு பரோலில் விடக் கூடது என்றும், நீதிமன்றம் தன் உத்தரவில் கூறியுள்ளது.