பிரிட்டன், அயர்லாந்துக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்
பிரிட்டன், அயர்லாந்துக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்
ADDED : மார் 05, 2025 03:40 AM

லண்டன், : நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் ஆறு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக, பிரிட்டனின் லண்டனுக்கு நேற்று சென்றடைந்தார். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி, பல முக்கிய பிரமுகர்கள், பிரிட்டன் வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோரை அவர் சந்திக்கிறார்.
இந்தியா, பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. இதைத் தவிர, இரு தரப்பு வெளியுறவு கொள்கையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அந்த முயற்சியை துவக்கியுள்ளன.
இந்த சூழ்நிலையில், பிரிட்டனுக்கு ஜெய்சங்கர் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இரு தரப்பு உறவுகள் தொடர்பாக, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆறு நாட்களில், பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அங்கு அமைக்கப்பட்டுள்ள துாதரகங்களையும் திறந்து வைக்கிறார்.