நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பாட்னாவிலும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பாட்னாவிலும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
UPDATED : பிப் 28, 2025 02:27 PM
ADDED : பிப் 28, 2025 07:22 AM

காத்மண்டு: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பீஹாரின் பாட்னா உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சிந்துபல்சோக் மாவட்டத்தின் பைரப் குந்தா பகுதியில் இன்று அதிகாலை 2.35 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேபாளம் மட்டுமின்றி, பீஹாரின் பாட்னா, மேற்கு வங்கத்தின் சிலிகுரி உள்ளிட்ட பல்வேறு இந்திய பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்டடங்கள் குலுங்கியுள்ளன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இதுவரையில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்த எந்த தகவலும் இல்லை.
ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கணிப்பின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது. அதேபோல, இந்தியாவின் தேசிய நிலநடுக்கம் ஆய்வு மையத்தின் கணிப்பின் படி, 5.5ஆக பதிவாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஹிமாலய பகுதியான திபெத்தில் 6 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 125 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.