ADDED : ஆக 30, 2024 11:43 PM

கோபன்ஹேகன்: மேற்கு வங்கத்துக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கில், இந்தியாவால் தேடப்படும் டென்மார்க்நாட்டை சேர்ந்த குற்றவாளி நீல்ஸ் ஹோல்க்கை நாடு கடத்த, அந்நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
மேற்கு வங்கத்தில், 1995ல் மார்க்.கம்யூ., ஆட்சி நடந்தது. அப்போது, மேற்கு வங்கத்தில் கலவரத்தை ஏற்படுத்த, 4 டன் ஆயுதங்களுடன், ரஷ்ய சரக்கு விமானம் வந்தது. இதில், கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. இவை, மேற்கு வங்கத்தின் புருலியா என்ற இடத்தில் விமானத்தில் இருந்து வீசப்பட்டன. இந்த விமானத்தை நம் பாதுகாப்பு படையினர் பிடித்தனர். இதில், ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த நீல்ஸ் ஹோல்க் உட்பட ஏழு பேர் இருந்தனர்.
மற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 1996ல், நீல்ஸ் ஹோல்க் மட்டும் விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன், டென்மார்க் தப்பிச் சென்றார்.
ஆயுத கடத்தல் வழக்கில், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக, நீல்ஸ் ஹோல்க் அறிவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்த வேண்டும் என, இந்தியா பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், நீல்ஸ் ஹோல்க்கை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, டென்மார்க் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், நம் நாட்டின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்தியாவிடம் ஒப்படைத்தால், ஐரோப்பிய மனித உரிமை சட்டங்களை மீறும் வகையில், நீல்ஸ் ஹோல்க் நடத்தப்படக்கூடும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.