ADDED : மார் 05, 2025 03:48 AM

பெல்கிரேடு; செர்பியா நாட்டின், பார்லிமென்டில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், வண்ண புகைக் குண்டுகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவில், பிரதமர் மிலோஸ் உசெவிக் தலைமையில், செர்பிய முற்போக்கு கட்சி ஆட்சி நடக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன், இங்குள்ள ரயில் நிலையம் ஒன்றின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில், 15 பேர் பலியாகினர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் ஜனவரி இறுதியில், பிரதமர் பதவியை மிசோல் உசெவிக் ராஜினாமா செய்தார். எனினும் இதற்கு செர்பியா பார்லி., ஒப்புதல் தரவில்லை. செர்பியா சட்டப்படி, பிரதமர் ராஜினாமா செய்தால், பார்லி., ஒப்புதல் தர வேண்டும்.
இந்நிலையில் நேற்று, செர்பியா பார்லி., வழக்கம் போல் கூடியது. அப்போது, மிசோல் உசெவிக் ராஜினாமாவுக்கு உடனடியாக ஒப்புதல் தரக்கோரி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் அனா பிரனாபிக்கை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நிலைமை மோசமானது. எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சபைக் காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது அவர்களுக்கும், எம்.பி.,க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு புகைக் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால், பார்லி.,யில் புகை மண்டலம் சூழ்ந்தது.
இந்த தாக்குதலில், மூன்று எம்.பி.,க்கள் காயமடைந்தனர். ஆளுங்கட்சி எம்.பி., ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2023 டிசம்பரில், நம் நாட்டின் லோக்சபாவுக்குள் அத்துமீறிய இருவர், வண்ண புகைக்குண்டுகளை வீசியது குறிப்பிடத்தக்கது.