விண்வெளிக்கு சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது பயணம் ஒத்திவைப்பு
விண்வெளிக்கு சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது பயணம் ஒத்திவைப்பு
ADDED : மே 08, 2024 01:36 AM

கேப் கேனவரல், இந்தியாவை பூர்விகமாக உடைய சுனிதா வில்லியம்ஸ், மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சாதனை பயணம் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக கடைசி நேரத்தில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, 'நாசா'வின் சார்பில் வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டது.
'போயிங்' நிறுவனம் தயாரித்துள்ள 'ஸ்டார்லைனர்' என்ற விண்கலம் வாயிலாக இந்தப் பயணம், இந்திய நேரப்படி நேற்று காலை 8:04 மணிக்கு புறப்படுவதாக இருந்தது.
ஆனால், விண்கலம் ஏவப்படுவதற்கு, 90 நிமிடங்களுக்கு முன், தொழில்நுட்ப பிரச்னையால், இந்த பயணம் திடீரென நிறுத்தப்பட்டது.
ஏவுகலனின், 'ஆக்சிஜன் ரிலீப் வால்வில்' ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவை பூர்விகமாக உடைய சுனிதா வில்லியம்ஸ், 59, மற்றும் நாசாவின் பேரி வில்மோர் இதில் பயணம் செய்வதாக இருந்தது.
அடுத்து இந்த விண்கலம் எப்போது செலுத்தப்படும் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. விண்வெளி பயணத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ள சுனிதா வில்லியம்ஸ், மூன்றாவது முறையாக பயணம் செய்வதற்கு மிகவும் ஆவலுடன் இருந்தார்.
ஒரு புதிய விண்கலத்தில் முதல் முறையாக பயணித்த விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற இருந்தார். அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 322 நாட்கள் விண்வெளியில் இருந்து அவர் சாதனை படைத்துள்ளார்.
மேலும், விண்வெளியில் அதிக நேரம் நடந்தவர் என்ற பெருமையை வைத்திருந்தார். பெக்கி விஸ்டன் அந்த சாதனையை சமீபத்தில் முறியடித்தார்.
கடந்த, 2006, டிச., 9ல் முதல் முறையாக விண்வெளிக்கு சுனிதா சென்றார். அவர், 2007, ஜூன், 22 வரை அங்கிருந்தார்.
அப்போது, நான்கு முறை விண்வெளியில் நடந்து, 29 மணி, 17 நிமிடங்கள் விண்வெளியில் நடந்த சாதனையைப் படைத்தார். இரண்டாவது முறையாக, 2012ல் ஜூலை 14 முதல், நவ., 18 வரை அவர் விண்வெளிக்கு சென்றார்.
மீண்டும் விண்வெளிக்கு செல்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், சற்று பதற்றமாக உணர்வதாகவும் அவர் கூறினார். இதற்கு முன், பகவத் கீதையை தன்னுடன் விண்வெளிக்கு எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், தற்போது தனக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும் விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார்.
போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் வாயிலாக, 10 நாட்கள் விண்வெளியில் இருக்க திட்டமிடப்பட்டிருந்தது.

