ADDED : மார் 05, 2025 03:47 AM

பெஷாவர்: பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், ஆப்கன் வீரர் ஒருவர் இறந்தார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் உள்ள டொர்காம் கிராசிங், மிகவும் முக்கியமான எல்லை பாதை. அந்த பகுதியில், பாகிஸ்தான் சோதனைச் சாவடியை அமைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய வழித்தடமாக இருக்கும் இந்த பாதை வழியே, தினமும், ஆயிரக்கணக்கான லாரிகள் மற்றும் வாகனங்கள் சென்று வருவது வழக்கம்.
டொர்காம் கிராசிங் பகுதியில் ஆப்கன் புதிய சோதனைச்சாவடி கட்டுகிறது. இதற்கு, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. நீறு பூத்த நெருப்பாக இருந்த மோதல் நேற்று முன்தினம் வெடித்தது. பாகிஸ்தான் படைகள் மீது ஆப்கன் வீரர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதலில், ஒரு ஆப்கன் வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார்; இன்னொருவர் படுகாயம் அடைந்தார்.
இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இரு புறமும், 5,000க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் காத்திருக்கின்றன. கடும் குளிரில் அந்த வாகனங்களின் டிரைவர்கள், எந்த பக்கமும் செல்ல முடியாமல் வாகனங்களிலேயே காத்து கிடக்கின்றனர்.
இதனால், ஆப்கனுக்கு கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு, 5 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படுகிறது. இரு நாடுகளும் கூடுதல் வீரர்களை எல்லையில் குவித்து வருவதால், பதற்றம் தொடர்கிறது.