ADDED : செப் 10, 2024 01:29 AM

ஹனோய், வியட்நாமில், 'யாகி' சூறாவளி புயல் கரையை கடந்த நிலையில், அங்கு பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக மழை, நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை, 59 ஆக அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், யாகி புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து சாவ் பாங், பூதோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி, பல இடங்களில் அபாய அளவை தாண்டி செல்வதால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுஉள்ளது.
இதுதவிர, மலையோரப் பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
சாவ் பாங் மாகாணத்தில் உள்ள மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவைத் தொடர்ந்து, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அவ்வழியாக 20 பயணியருடன் வந்த பஸ் அடித்துச் செல்லப்பட்டது.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பஸ்சில் உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட முயன்றனர். எனினும், அந்த பகுதிக்கு மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை. இதனால், 20 பயணியரின் நிலை என்ன ஆனது என்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் பூதோ மாகாணத்தில் ஆற்றில் கட்டப்பட்ட இரும்பு பாலம் நேற்று திடீரென சரிந்து விழுந்தது. அப்போது, அந்தப் பாலத்தின் மீது 10 கார்கள், இரண்டு மோட்டார் பைக்குகள் சென்றதாகவும், அவை ஆற்றில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர், ஆற்றில் தத்தளித்த மூன்று பேரை காப்பாற்றினர். மாயமான, 13 பேரை தேடி வருகின்றனர்.
யாகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளால், 59 பேர் பலியானதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.