ADDED : செப் 05, 2024 12:41 AM
கீவ்:ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துஉள்ள நிலையில், உக்ரைன்வெளியுறவுத்துறை அமைச்சர் டிமித்ரோ குலேபா, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர், இரண்டாண்டுகளைக் கடந்து தொடர்கிறது.
சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிகளை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, உக்ரைன் மீதான தன் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைனின் போல்டாவா ராணுவ மையத்தின் மீது ரஷ்யா சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 50 பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் லீவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏழு பேர் உயிரிழந்தனர்; 35 பேர் காயமடைந்தனர்.
விரைவில் தன் அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் டிமித்ரோ குலேபா, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
பார்லிமென்டின் அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.