கனடா, மெக்சிகோ மீது 25 சதவீத வரி: அமெரிக்க அதிபர் உத்தரவு அமலானது
கனடா, மெக்சிகோ மீது 25 சதவீத வரி: அமெரிக்க அதிபர் உத்தரவு அமலானது
ADDED : மார் 05, 2025 03:44 AM

வாஷிங்டன்; தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ளார். இது அமெரிக்காவில் விலைவாசி உயர்வை ஏற்படுத்துவதுடன், வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, அஞ்சப்படுகிறது.
அமெரிக்க அதிபராக ஜன., 20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தன் எல்லையை ஒட்டியுள்ள வட அமெரிக்க நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.
இதைத் தவிர, போதைப் பொருட்களும் அதிகளவில் கடத்தப்படுகின்றன.இவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப் போவதாக எச்சரித்திருந்தார்.
சீனாவின் பொருட்களுக்கு, 10 சதவீதம் வரி விதித்து கடந்த மாதம் டிரம்ப் உத்தரவிட்டார். அதே நேரத்தில், மெக்சிகோ மற்றும் கனடா மீதான நடவடிக்கைகளை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக மெக்சிகோ மற்றும் கனடா நடவடிக்கை எடுத்தன. ஆனால், அது போதுமானதாக இல்லை. தொடர்ந்து ஆட்கள் சட்டவிரோதமாக நுழைவதுடன், போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த இரு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கும் உத்தரவை, டிரம்ப் நேற்று முன்தினம் பிறப்பித்தார்.
இது நேற்று முதலே அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அறிவித்தார். அடுத்த, 21 நாட்களில், படிப்படியாக இது அறிமுகம் செய்யப்படும் என, அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளின்படி, இதில் உரிய முடிவு எடுக்கப்படும் என, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பம் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கையால், அமெரிக்காவில் விலைவாசி உயரும் என்றும், அது மக்களின் நுகர்வை குறைத்துவிடும் என்றும், நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது நாட்டின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.