ADDED : ஜன 12, 2024 02:26 AM

ஜெனீவா விடுமுறை காலம் மற்றும் புதிய உருமாறிய ஜே.என்.1 வகை தொற்று பரவல் காரணமாக, கடந்த மாதம் மட்டும் கொரோனா தொற்றுக்கு உலகம் முழுதும் 10,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:
டிசம்பர் மாதத்தில் மட்டும், 50 நாடுகளில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் விகிதம், 42 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலையை காண முடிகிறது.
உலக முழுதும் 10,000 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். விடுமுறை காலம் என்பதால் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டது மற்றும் புதிய உருமாறிய ஜே.என்.1 வகை தொற்று பரவல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளுடன் ஒப்பிடுகையில், 10,000 பேர் உயிரிழந்தது பெரிய எண்ணிக்கையாக பார்க்கப்படாது.
ஆனாலும், தவிர்த்திருக்க கூடிய நிலையில் இந்த உயிரிழப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜே.என்.1 வகை தொற்று ஒமைக்ரான் வகையில் இருந்து உருமாறியது என்பதால் தற்போதுள்ள தடுப்பூசி போதிய பாதுகாப்பை அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.