/
செய்திகள்
/
உலகம்
/
விடுதலை பார்லிமென்டை முற்றுகையிட்டு தாக்கிய 1,250 ரவுடிகள்... குற்றவாளிகளை தேசபக்தர்களாக அறிவித்தார் டிரம்ப் போலீசை அடித்து கொன்றவர்களுக்கும் மன்னிப்பு
/
விடுதலை பார்லிமென்டை முற்றுகையிட்டு தாக்கிய 1,250 ரவுடிகள்... குற்றவாளிகளை தேசபக்தர்களாக அறிவித்தார் டிரம்ப் போலீசை அடித்து கொன்றவர்களுக்கும் மன்னிப்பு
விடுதலை பார்லிமென்டை முற்றுகையிட்டு தாக்கிய 1,250 ரவுடிகள்... குற்றவாளிகளை தேசபக்தர்களாக அறிவித்தார் டிரம்ப் போலீசை அடித்து கொன்றவர்களுக்கும் மன்னிப்பு
விடுதலை பார்லிமென்டை முற்றுகையிட்டு தாக்கிய 1,250 ரவுடிகள்... குற்றவாளிகளை தேசபக்தர்களாக அறிவித்தார் டிரம்ப் போலீசை அடித்து கொன்றவர்களுக்கும் மன்னிப்பு
UPDATED : ஜன 22, 2025 02:15 AM
ADDED : ஜன 22, 2025 01:39 AM

வாஷிங்டன்,அமெரிக்க பார்லிமென்ட் வளாகத்தை, 2021ல் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய, 1,250 ரவுடிகளை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ள புதிய அதிபர் டொனால்டு டிரம்ப், அவர்களை தேசபக்தர்களாக அறிவித்தார். போலீசை அடித்துக் கொன்றவர்கள் உள்பட, இந்த தாக்குதல்களில் குற்றஞ்சாட்டப்பட்ட, 1,250க்கும் மேற்பட்டோருக்கு விடுதலை அளித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், 78, நேற்று முன்தினம் பதவியேற்றார். கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியான, துணை அதிபராக இருந்த கமலா ஹாரிசை அவர் இந்தத் தேர்தலில் வென்றார்.
முன்னதாக, கடந்த, 2020ல் நடந்த அதிபர் தேர்தலின்போது, அப்போது அதிபராக இருந்த டொனால்டு டிரம்பை, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க டொனால்டு டிரம்ப் மறுத்தார்.
தேர்தல் நடைமுறையின் ஒரு பகுதியாக, 2021 ஜன., 6ல், 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம், 'கேபிடோல்' எனப்படும் அந்நாட்டின் பார்லிமென்ட்டில் நடக்க இருந்தது. அந்தக் கூட்டத்தில்தான், முறைப்படி அதிபராக ஜோ பைடன் அறிவிக்கப்பட இருந்தார்.
அந்த நேரத்தில் பார்லிமென்ட் வளாகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட, டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். பல வகையான ஆயுதங்களுடன் வந்த அவர்கள் பார்லிமென்டுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கிருந்த எம்.பி.,க்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது, அங்கு குழுமியிருந்த ரவுடிகள் தாக்கினர்.
பார்லிமென்ட் வளாகத்தில் கண்ணில் பட்டதையெல்லாம் அந்தக் கும்பல் அடித்து நொறுக்கியது. நீண்ட நேர போராட்டத்துக்குப் பின், வன்முறையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். அந்த நாட்டின் பார்லிமென்டிலேயே நடந்த இந்த வன்முறை, அமெரிக்காவின் ஜனநாயக வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது.
ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பின், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வாறு நாடு முழுதும், 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. வன்முறையைத் தூண்டிவிட்டதாக, டொனால்டு டிரம்ப் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சிலருக்கு, 18 முதல் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை நீதிமன்றங்கள் விதித்தன. இதைத் தவிர, வன்முறையில் ஈடுபட்ட, 1,250க்கும் மேற்பட்ட ரவுடிகளுக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன. போலீசை தாக்கியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களும் இதில் அடங்குவர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தன் பதவிகாலத்தின் முதல் நாளில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பார்லிமென்டில் நடந்த வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும், மன்னிப்பு வழங்கும் உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். பொது மன்னிப்பு வழங்குவதற்கு அமெரிக்க அதிபர்களுக்கு அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்தி, வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றும் தண்டனை பெற்ற அனைவரையும் விடுவிப்பதாக, ஒரே உத்தரவில் டிரம்ப் கூறியுள்ளார்.
இவர்கள் தேசபக்தர்கள், முந்தைய அரசின் பிணைக்கைதிகள் என்று, அந்த உத்தரவில் டிரம்ப் கூறியுள்ளார். நான்கு ஆண்டுகளாக ஜோ பைடன் அரசின் அரசியல் விரோதப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ள, ஜனநாயகத்தை காப்பாற்ற முயன்ற அப்பாவிகளை விடுவிக்கப்பட்டுள்ளதாக, டிரம்ப் கூறியுள்ளார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவுகளுக்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக படங்கள், வீடியோக்கள் பல ஊடகங்களில் வெளியாகி, நீதிமன்றங்கள் விசாரித்து தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அனைவரையும் விடுதலை செய்வது, நீதித்துறையை கேலி செய்வதாக அமைந்துள்ளதாக, ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.
இதற்கிடையே, டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, சிறையில் உள்ளவர்களை விடுவிப்பது தொடர்பாகவும், அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாகவும் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் உத்தரவுகளை டிரம்ப் பிறப்பிப்பார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாளிலேயே, அதுவும் அனைவரையும் விடுதலை செய்யும் உத்தரவு பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.