UPDATED : ஜூன் 06, 2025 07:03 AM
ADDED : ஜூன் 06, 2025 12:31 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஆப்கானிஸ்தான், மியான்மர் உட்பட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடையும், கியூபா, வெனிசுலா உட்பட ஏழு நாட்டினருக்கு கடும் கட்டுபாடுகளையும் நேற்று விதித்தார்.
அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில், கடந்த 1ல் இஸ்ரேல் ஆதரவாளர்களின் போராட்டம் அமைதியான முறையில் நடந்தது. காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க, போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.
அப்போது, 'சுதந்திர பாலஸ்தீனம்' என கத்திக்கொண்டு கூட்டத்தினர் மீது பெட்ரோல் குண்டுகளை ஒருவர் வீசினார். இதில் 15 பேர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய முகமது சப்ரி சோலிமான், எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் என தெரிந்தது. அவரை கைது செய்தனர். இந்நிலையில், அதிபர் டிரம்ப், 19 நாடுகளுக்கு முழுமையான மற்றும் பகுதியளவு பயண தடை விதிக்கும் உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார்.
2,200 வெளிநாட்டினர் ஒரே நாளில் கைது
அதிபர் டிரம்ப் அரசு அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் தங்கி யுள்ளவர்களை கண்டுபிடித்து வெளியேற்றுவ தில் தீவிரம் காட்டி வருகிறது. நாளொன்றுக்கு 3,000 நபர்களை கண்டறிய குடியேற்ற மற்றும் சுங்கத்துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் சரிபார்க்க நேரில் வரும்படி, இவர்களுக்கு மொபைல்போனில் செய்தி
அனுப்பப்பட்டன. அதன்படி வந்தவர்களை நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 2,200 சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்களை குடியேற்ற மற்றும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.