ADDED : டிச 11, 2025 05:46 AM

கார்டூம்: சூடானின் மிக முக்கியமான ஹெக்லிக் எண்ணெய் வயல் அருகே ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில், ராணுவத்திற்கும், ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு முதல் அதிகார மோதல் உள்ளது.
இந்த மோதலில் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்; லட்சக் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், தெற்கு சூடானின் முக்கிய பொருளாதாரமான, ஹெக்லிக் எண்ணெய் வயலை ஆர்.எஸ்.எப்., சமீபத்தில் கைப்பற்றியது. இதையடுத்து, 3,900 சூடான் ராணுவ வீரர்கள், டாங்கிகள், கவச வாகனங்கள், பீரங்கிகளை ஒப்படைத்துவிட்டு தெற்கு சூடான் எல்லைக்கு தப்பியோடினர்.
இதற்கு பதிலடியாக, ராணுவம், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் மூலம் நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 7 பழங்குடியினத் தலைவர்கள், 10க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் உட்பட, 25க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர்.

