சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்: 37 பயங்கரவாதிகள் பலி
சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்: 37 பயங்கரவாதிகள் பலி
UPDATED : செப் 30, 2024 06:58 AM
ADDED : செப் 30, 2024 01:30 AM

பெய்ரூட்: சிரியாவில், அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஐ.எஸ்., மற்றும் அல் - குவைதா பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 37 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடுகளான சிரியா, இஸ்ரேல் உள்ளிட்ட பகுதிகளில், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. அக்குழுக்களை ஒழிக்க, அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டு ராணுவ வீரர்கள், சிரியாவில் முகாமிட்டு பயங்கரவாத குழுக்களுக்கு பதிலடி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களை குறிவைத்து, அமெரிக்க ராணுவம் சமீபத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், ஐ.எஸ்., மற்றும் அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் ஆதரவான ஹுராஸ் அல்தின் பிரிவைச் சேர்ந்த 37 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், 'அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலனைக் கருதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 'ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், இந்த தாக்குதலில் பொது மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை' என, குறிப்பிட்டுள்ளது.

