போதைப்பொருள் கடத்திய 4 படகுகள் தகர்ப்பு போதைப்பொருள் கடத்திய 4 படகுகள் தகர்க்கப்பட்டன
போதைப்பொருள் கடத்திய 4 படகுகள் தகர்ப்பு போதைப்பொருள் கடத்திய 4 படகுகள் தகர்க்கப்பட்டன
ADDED : அக் 30, 2025 12:47 AM

வாஷிங்டன்: அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்த முயன்றதாக நான்கு படகுகள் தகர்க்கப்பட்டதாகவும், இதில், 14 பேர் உயிரிழந்ததாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். போதைப்பொருள் மற்றும் கடத்தல் பயங்கரவாதிகளை ஒழிப்போம் என்று கூறி கரீபியன், பசிபிக் கடற்பகுதியில் சிறிய படகுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தவும் உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த செப்டம்பர் முதல் நடத்தப்பட்ட தாக்குதல்களில், 14 படகுகள் அழிக்கப்பட்டு, 57 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் இந்த செயலுக்கு வெனிசுலா, கொலம்பியா அதிபர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரா சர்வதேச போதைப்பொருள் வியாபாரி என்று டிரம்ப் குற்றம்சாட்டி, அவரை கைது செய்ய உதவினால், 415 கோடி ரூபாய் சன்மானமும் அறிவித்துள்ளார். அதே சமயம் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, போதைப்பொருள் விவசாயத்தை ஊக்குவிப்பதாகக் கூறி, அவர் மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளார்.
இந்நிலையில், கிழக்கு பசிபிக் கடலில் நேற்று முன்தினம் போதைப் பொருட்களுடன் சென்ற நான்கு படகுகளை தகர்த்து, 14 பேரை கொன்றதாக பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது, டிரம்ப் நிர்வாகத்தின் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையின் வேகம் என்று ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.

