வெனிசுலா: போதைப்பொருள் கடத்தியதாக 5வது கப்பல் மீது தாக்குதல்
வெனிசுலா: போதைப்பொருள் கடத்தியதாக 5வது கப்பல் மீது தாக்குதல்
ADDED : அக் 15, 2025 11:27 PM
நியூயார்க்: வெனிசுலா கடற்கரையில் போதைப் பொருள் கடத்தியதாக ஐந்தாவது கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இதையடுத்து, வெனிசுலா அருகே சர்வதேச கடற்பகுதியில் போதைப் பொருட்களை கடத்தும் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நேற்று சிறிய கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கப்பல் பற்றி எரியும் 33 வினாடிகள் வீடியோவை சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த தாக்குதலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் முதல் அமெரிக்காவின் ஐந்தாவது தாக்குதலாக இது அமைந்துள்ளது. இவற்றில், 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.