ADDED : அக் 15, 2025 11:28 PM
நியூயார்க்: உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதல் 10 இடத்திலிருந்து, 20 ஆண்டுகளில் முத ல்முறையாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்த 'ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ்' என்ற நிறுவனம், சர்வதேச பயணம் தொடர்பான ஆய்வுகளை செய்து வருகிறது.
விமான நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து, விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு செல்ல எந்த பாஸ்போர்ட் உதவும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகில் 227 நாடுகளின் அனுமதியைக் கணக்கிட்டு அந்நிறுவனம் தரவரிசைப் பட்டியலை தயாரித்து உள்ளது.
இதில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டு பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 193 நாடுகளுக்கு செல்ல முடியும்.
இரண்டாவது இடத்தில் பிரான்ஸ், அதற்கு அடுத்த இடங்களில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன.
அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது 180 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்ல முடியும். இது முந்தைய எண்ணிக்கையான 185லிருந்து குறைந்துள்ளது.
மேலும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதல் 10 இடத்திலிருந்தும், 20 ஆண்டுகளில் முதல்முறையாக அமெரிக்கா வெளியேறி உள்ளது.
கடந்த, 2014ல் இருந்து முதல் இடத்தில் இரு ந்த அமெரிக்கா, தற்போது மலேஷியாவுடன் இணைந்து 12வது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா ஏற்படுத் திய உலகளாவிய விசா கொள்கை மாற்றங்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் பிரேசில், மியான்மர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கர்களுக்கு விசா இன்றி அனுமதியை ரத்து செய்துள் ளன.