பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் பதற்றம் இரு தரப்பு தாக்குதலில் பலர் உயிரிழப்பு
பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் பதற்றம் இரு தரப்பு தாக்குதலில் பலர் உயிரிழப்பு
ADDED : அக் 15, 2025 11:31 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே திடீரென துவங்கியுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால், எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், மற்றொரு பக்கம் ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
கடந்த, 2021ல், ஆப்கானிஸ்தான் ஆட்சி நிர்வாகத்தை, தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. அதை உலக நாடுகள் ஏற்காத நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து அதற்கு ஆதரவாக இருந்து வந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் -- இ -- தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் மீது தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் தலிபான் என்றழைக்கப்படும் இந்த அமைப்புக்கு, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், டி.டி.பி., தலைவரை குறிவைத்து ஆப்கானிஸ்தானின் காபூலில் சமீபத்தில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த ஆப்கானிஸ்தான், பாக்., எல்லையில் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது.
கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
மேற்காசிய நாடுகளான கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை மோதலை நிறுத்தும்படி வலியுறுத்தின.
அதன்படி கடந்த இரு நாட்களாக மோதல் சற்று தணிந்திருந்தது. இருப்பினும் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது.
இந்த நிலையில், தலிபான்களும், டி.டி.பி., பயங்கரவாதிகளும் இணைந்து, ஒரே நேரத்தில் பாக்., பாதுகாப்பு படை மீது நேற்று முன்தினம் முதல் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் பறித்து சென்றனர்.
இதைத் தவிர, தலிபான் கனரக பீரங்கி மற்றும் துல்லிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் சோதனைச் சாவடிகளை தாக்கியது.
டி.டி.பி., பயங்கரவாதிகள் கைபர் பக்துங்க்வாவில் பதுங்கு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை தீவி ரப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டக் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், தலிபான்கள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் தென்மேற்கு மற்றும் வடமேற்கு எல்லைகளி ல் உள்ள ராணுவ நிலைகள் மீது, தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதில், 30 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், ஸ்பின் போல்டக்கில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், 20 பேர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
தலிபான்களும், தெஹ்ரிக் - - இ -- தலிபான் பயங்கரவாதிகளும் இணைந்து ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், பாக்., படைகளின் முன்னணி நிலைகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எல்லைகளில் நடந்த மோதல்களில், பாக்., வீரர்கள் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மோதல்களில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை, ஒரு பல்முனை போர்க்களமாக மாறியுள்ளது.
ஆப்கன் அகதிகள் முகாம்
இடிக்கப்பட்டதால் பதற்றம்
பாகிஸ்தானின் கராச்சி
புறநகரில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாமை அதிகாரிகள் இடித்தபோது, மோதல்
ஏற்பட்டது. இங்கு, 40 ஆண்டுக்கு முன், 200 ஏக்கர் அரசு நிலத்தில்
ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டது. அங்கு, 3,500 கான்கிரீட்
வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது பாதி பேர் நாடு திரும்பியதால்,
ஆளில்லாத கட்டடங்கள் நில அபகரிப்பாளர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக
பாக்., அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் கட்டடங்களை
அதிகாரிகள் இடித்து சுத்தம் செய்தனர். ஆனால் சட்டப்பூர்வ ஆவணங்களுடன் அங்கு
வசிக்கும் ஆப்கானியர்களின் வீடுகள் இடிக்கப்படுவதாக எழுந்த தகவலையடுத்து,
போலீசாருடன் சிலர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது சிலருக்கு காயம் ஏற்பட்டது.