அமெரிக்கா திருப்பி அனுப்பும் இந்தியர்கள் 7.25 லட்சம்
அமெரிக்கா திருப்பி அனுப்பும் இந்தியர்கள் 7.25 லட்சம்
UPDATED : பிப் 06, 2025 06:26 PM
ADDED : பிப் 05, 2025 11:39 PM

புதுடில்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 104 இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானத்தில் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு நேற்று திருப்பி அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக 7.25 லட்சம் இந்தியர்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால், நம் நாட்டில் மிகப்பெரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில், வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவில் குறைந்தபட்சம் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக, வாஷிங்டன் டி.சி.,யை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'பியூ' எனப்படும் சிந்தனைக் குழாம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் முதல்கட்டமாக 18,000 பேர் அடங்கிய பட்டியலை உறுதி செய்துள்ள அமெரிக்கா, அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த 205 பேர் முதற்கட்டமாக, நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது. அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான சி - 17 விமானம் வாயிலாக அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திட்டமிட்டபடி, பிப்., 4ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், நேற்று காலை இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலதாமதமாக நேற்று மதியம் 1:55
மணிக்கு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ்ஜி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. மொத்தம் 205 பேர் திருப்பி அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 104 பேர் மட்டுமே முதற்கட்டமாக வந்தடைந்தனர். இதில், 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து சென்ற தலா 33 பேரும் இதில் அடங்குவர்.
மஹாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து சென்ற தலா மூன்று பேரும், சண்டிகரைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 19 பெண்கள் இடம்பெற்றிருந்தனர்; 4 வயது சிறுவன் உட்பட 13 சிறார்கள் இருந்தனர். 45 பேர், 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அனைவரின் கைகளும், கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன.
அவர்கள் நாடு கடத்தப்படும் குற்றவாளிகள் என்பதால் இப்படி மோசமாக நடத்தப்பட்டதாக உடன் வந்த அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையத்தில் குவிந்திருந்த பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள், திரும்பி வந்த அனைவரையும் விசாரித்து, ஏதேனும் குற்றப் பின்னணி உள்ளதா எனச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், பஞ்சாப் அரசின் உதவியுடன் அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவர்களின் வருகையை ஒட்டி, அமிர்தசரஸ் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்தியர்கள் வருகை குறித்து பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் கூறுகையில், “அமெரிக்க அரசின் நாடு கடத்தல் முடிவு ஏமாற்றத்தை அளிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய இவர்களுக்கு, அந்நாட்டு அரசு நிரந்தர குடியுரிமை வழங்கியிருக்கலாம். அமெரிக்காவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தவர்களின் நிலைமை குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை விரைவில் சந்தித்து ஆலோசிக்க உள்ளேன்,” என்றார்.
முதலில், 205 பேர் திருப்பி அனுப்பப்படுவர் என அமெரிக்கா கூறியிருந்த நிலையில், 104 பேர் மட்டுமே வந்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள 7.25 லட்சம் பேரும் அடுத்தடுத்து, இதே பாணியில் திருப்பி அனுப்பவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அவ்வாறு வரும் அனைவரும் வேலை, பணம், உடைமைகளை இழந்து இந்தியா வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏற்கனவே, இங்கு குறிப்பிட்ட சதவீதத்தினர் உரிய வேலைவாய்ப்பின்றி கஷ்டப்படும் சூழலில், ஒரே நேரத்தில் 7.25 லட்சம் பேரும் இந்தியா வருவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அளவில் உதவிய இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவது, அந்நாட்டிற்கு சிறிய அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், நம் நாட்டில் இது மிகப்பெரிய அளவிலான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு அதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.