ADDED : அக் 11, 2025 12:00 AM

மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் விசாயாஸ் மாகாணத்தில் சமீபத்தில் 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 69 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தவிர, 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கட்ட டங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிண்டானாவோ பகுதியில் உள்ள டாவோ ஓரியன்டலில் உள்ள மனாய் நகருக்கு அருகில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 7.5 ஆக பதிவானது.
நிலநடுக்கம் காரணமாக சில பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 300 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளில், சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எச்சரித்தது.
பிலிப்பைன்ஸ் கடற்கரைகளில் சில பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக, 10 அடி வரை அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேஷியாவின் சில பகுதிகளுககு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.