UPDATED : அக் 03, 2024 02:16 PM
ADDED : அக் 02, 2024 11:43 PM

ஜெருசலேம் : இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் சண்டை துவங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவு நாடுகள் குரல் கொடுப்பதால், மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இரண்டரை ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில், மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலை, பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர், இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு இடையேயான போராக உருமாறியது. தற்போது, இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் சண்டை துவங்கியுள்ளது.
இஸ்ரேல் மீது, ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்தாண்டு அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது இஸ்ரேல் தன் தாக்குதல்களை துவக்கியது.
இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, லெபனானில் இருந்து இயங்கும், அந்த நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, ஒரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் நிலையில், ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியது.
இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஈரானின் முழு ஆதரவு உள்ளது. சமீபத்தில் ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட அதன் முக்கிய தளபதிகளை, இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்த தாக்குதல்களில் கொன்றது.
மேலும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
தன் ஆதரவு பெற்றுள்ள ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புகள் மீதான இந்த தாக்குதல், ஈரானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மிகத் தெளிவாக திட்டமிட்டு, ஹெஸ்பொல்லா தலைவர்களை இஸ்ரேல் வீழ்த்தியது, ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, இஸ்ரேல் - ஈரான் இடையே மறைமுக போர் உள்ளது. கடந்த ஏப்., மாதம், ஈரானின் டெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
இவ்வாறு நடந்த பல சம்பவங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது; நேற்று முன்தினம் இரவில், ஒரே நேரத்தில் 180 ஏவுகணைகளை செலுத்தியது.
தாக்குதல்
தன் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உறுதுணையாக இருப்பதை காட்டுவதற்காகவும், வெறும் பார்வையாளராக இருந்தால், இஸ்ரேலுக்கு அடிபணிந்ததாக கருதப்பட்டு விடும் என்பதாலும், இந்த தாக்குதலில் ஈரான் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
'தடுப்பு நடவடிக்கைகள் முடிந்து விட்டன. இவற்றுக்கு பதிலளிக்கிறோம் என்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதன் ஒவ்வொரு முக்கிய நகரங்களையும் அழிக்கும் வகையில் எங்களுடைய அடுத்த தாக்குதல்கள் இருக்கும்' என, ஈரான் கூறியுள்ளது.
ஈரான் செலுத்திய 180 ஏவுகணைகளில், 90 சதவீதத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதில் அமெரிக்காவும் உதவியுள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு தன் முழு ஆதரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஈரான் நடத்திய தாக்குதல்களில் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை; மேலும், பெரிய அளவில் சேதமும் ஏற்படவில்லை. அதனால், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் ஆலோசித்து வருகிறது.
ஈரான் ஏவுகணை செலுத்தியதால், அதன் ராணுவ கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேலின் பதில் தாக்குதல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ஈரானின் பொருளாதாரத்தை குலைக்கும் வகையில், அதன் எரிசக்தி கட்டமைப்புகளில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் காத்திருக்கிறது.
'ஈரானின் விபரீத நடவடிக்கைக்கு நிச்சயம் பதில் அளிப்போம். தகுந்த நேரத்தில், சரியான நேரத்தில் இந்த பதில் அளிக்கப்படும்' என, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.