ADDED : செப் 23, 2024 01:16 AM

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முதல் கட்டத்தில் இழுபறி ஏற்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட ஓட்டு எண்ணிக்கையைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அனுரா குமார திசநாயகே, 56, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் ஒன்பதாவது அதிபராக அவர் இன்று பதவியேற்க உள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையில், அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக மிகவும் அதிகபட்சமாக, 38 பேர் இதில் போட்டியிட்டனர்.
விருப்ப ஓட்டு
இலங்கை அதிபர் தேர்தல், விருப்ப ஓட்டு அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரை தேர்வு செய்யலாம். இதில், 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பெறாத நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பமாக வாக்காளர்கள் தேர்வு செய்த ஓட்டுகள் எண்ணப்படும்.
அந்த ஓட்டுகள், முதல் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்களின் ஓட்டுகளுடன் சேர்க்கப்படும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஓட்டு பதிவு முடிந்ததும் ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டன.
இதில், என்.பி.பி., எனப்படும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட, மார்க்சிஸ்ட் கொள்கையை பின்பற்றும், ஜே.வி.பி., எனப்படும் ஜனதா விமுக்தி பேரமுனா கட்சியின் அனுரா குமார திசநாயகே, 42.30 சதவீத ஓட்டுகளை பெற்றார். சமாகி ஜன பலவேகயாவின் சஜித் பிரேமதாசா, 32.75 சதவீத ஓட்டுகளைபெற்றார்.
முதன்முறை
சுயேச்சையாக போட்டியிட்ட தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 17 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றார். யாருக்கும், 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லை.
இலங்கை அதிபர் தேர்தல் இதுவரை இரண்டாம் கட்டத்துக்கு சென்றதில்லை. தற்போது முதல் முறையாக, இரண்டாம் கட்ட ஓட்டு எண்ணிக்கை நிலைக்கு சென்றது.
இரண்டாம் கட்ட ஓட்டு எண்ணிக்கையின்போது, தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே உட்பட, 36 வேட்பாளர்களின் விருப்ப ஓட்டுகள் எண்ணப்படாது என, அந்த நாட்டு தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
இன்று பதவியேற்பு
இதன்படி, முதல் இரண்டு இடங்களில் உள்ள அனுரா குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கு கிடைத்துள்ள இரண்டாம் விருப்ப ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று மாலை துவங்கியது.
இதில், அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றதாக, அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அவர் இன்று பதவியேற்க உள்ளதாக ஜே.வி.பி., தெரிவித்துள்ளது.
அனுரா குமார திசநாயகேவுக்கு, முதல் கட்டத்தில் 42.30 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில், 55.89 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.
அதே நேரத்தில் சஜித் பிரேமதாசாவுக்கு முதல் கட்டத்தில் 32.75 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில், 44.11 சதவீத ஓட்டுகளும் கிடைத்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
கடந்த 2022ல் இலங்கை பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது. அப்போது
தொடர்ச்சி 14ம் பக்கம்
இலங்கையின் புதிய...
முதல் பக்கத் தொடர்ச்சி
அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, பெரிய அளவில் வெற்றியும் கண்டார். ஆனாலும் விலைவாசியை கட்டுப்படுத்தாதது அவரது தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த, 2022ல் நாடு முழுதும் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். இந்தப் போராட்டங்களை முன்னின்றி நடத்தியதுடன், தன் பிரசாரத்தின்போது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதாக அளித்த வாக்குறுதிகளே, அனுரா குமார திசநாயகேவுக்கு அதிக ஆதரவு கிடைத்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் பாக்கியசெல்வம், முதல் கட்ட ஓட்டு எண்ணிக்கையில், 2,26,343 ஓட்டுகளும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, 3,42,781 ஓட்டுகளும் பெற்றனர்.