வங்கதேசத்தில் இடைக்கால அரசை அகற்ற ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தீவிரம்
வங்கதேசத்தில் இடைக்கால அரசை அகற்ற ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தீவிரம்
ADDED : மே 27, 2025 12:27 AM

டாக்கா : வங்கதேசத்தில் முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை அகற்ற, ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு உளவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இந்த அரசுக்கு ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் முழு ஆதரவு அளித்தார். விரைவில் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்று அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இடைக்கால அரசு அமைந்து எட்டு மாதங்கள் ஆகியும், தேர்தல் நடத்தாததை அடுத்து, பிற தளபதிகளுடன் வாக்கர் உஸ் ஜமான் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
அவர்கள் பொதுத்தேர்தல் நடத்த சம்மதித்த நிலையில், எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளும் பொதுத்தேர்தலை நடத்த இடைக்கால அரசை வலியுறுத்தின.
இதையடுத்து, வங்கதேச தேசியவாத கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் முஹமது யூனுஸ் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, 'பொதுத்தேர்தல் வரும் டிசம்பர் துவங்கி அடுத்தாண்டு ஜூன் வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, யூனுஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்த ராணுவ தளபதி வாக்கர், யூனுசின் இந்த முடிவை விரும்பவில்லை. இதையடுத்து இடைக்கால அரசை அகற்ற தேவையான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுக்கு எதிராக பொதுத் துறை நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் முன்னெடுத்துள்ள போராட்டத்தை வைத்து காய்களை நகர்த்த, அவர் திட்டமிட்டுள்ளதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்படுத்துவது அரசியலமைப்பு விதிமுறைகளை மீறுவதாக கூறி, அதிபர் முஹமது ஷஹாபுதீனை சந்தித்து அவசரகால நிலையை அறிவிக்க அழுத்தம் கொடுக்கவும், ராணுவ தளபதி வாக்கர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அவசர நிலையின் போது, இடைக்கால அரசை கலைத்துவிட்டு தேர்தலை விரைவுபடுத்தும்படி அதிபரிடம் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு கவிழ்க்கப்பட்ட 90 நாட்களுக்குள், புதிய அரசு அமைய வேண்டும் என்பதால், முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா ஆகியோரின் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிடும் முடிவையும் வாக்கர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளின் ஆதரவை பெற்றுள்ள அவர், அடுத்ததாக இடைக்கால அரசின் தோல்வி குறித்து மக்களிடையே பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.