ADDED : டிச 22, 2024 12:14 AM
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு மூன்று ஹிந்து கோவில்களில் வன்முறையாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி உள்ளனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, ஆக., 5ல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த, அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பினார். இதையடுத்து, இடைக்கால அரசு முகமது யூனுஸ் தலைமையில் பதவியேற்றது.
இதை தொடர்ந்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல் மற்றும் ஹிந்து கோவில்கள் சூறையாடப்படும் சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இங்குள்ள மைமன்சிங் மற்றும் தினாஜ்பூர் மாவட்டங்களில், கடந்த இரு நாட்களில் மட்டும் மூன்று ஹிந்து கோவில்களை வன்முறையாளர்கள் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இந்த கோவில்களில் இருந்த எட்டு சுவாமி சிலைகளையும் மர்ம நபர்கள் இடித்து அகற்றியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
முன்னதாக நவ., 29ல் சட்டோகிராமில் உள்ள மூன்று ஹிந்து கோவில்களில் கோஷம் எழுப்பியபடி புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியது. கடந்த வாரம் மட்டும் சிறுபான்மையினருக்கு எதிராக, 88 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.