நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வேண்டாம் என்கிறது வங்கதேசம்
நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வேண்டாம் என்கிறது வங்கதேசம்
ADDED : ஜன 06, 2025 12:37 AM

டாக்கா: வங்கதேச நீதிபதிகள் மற்றும் நீதித் துறை அதிகாரிகளுக்கு, இந்தியாவில் நடத்தப்படவிருந்த பயிற்சி திட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பாரபட்சம் காட்டுவதாக மாணவர் அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
கடும் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு ரகசியமாக வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது.
ரத்து
புதிய ஆட்சி பதவியேற்றது முதல், அங்குள்ள கோவில்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடக்கின்றன.
இந்த சூழலில், வங்கதேசத்தில் உள்ள 50 மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு நம் நாட்டில் உள்ள மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியில், அடுத்த மாதம் 10ல் ஒருநாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான செலவை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்த பயிற்சி ரத்து செய்யப்படுவதாக வங்கதேச சட்ட அமைச்சக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதற்கான காரணம் குறித்து அவர்கள் எதுவும் தெளிவுப்படுத்தவில்லை.
தீவிரம்
வங்கதேச உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்தே, இந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு 'டெய்லி ஸ்டார்' நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்தது முதல் இந்திய - வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், நீதிபதிகள் பயிற்சி ரத்து செய்யப்பட்டிருப்பது அதை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.