வங்கதேசத்தின் ரூபாய் நோட்டுகளில் முஜிபுர் ரஹ்மான் படத்தை நீக்க முடிவு
வங்கதேசத்தின் ரூபாய் நோட்டுகளில் முஜிபுர் ரஹ்மான் படத்தை நீக்க முடிவு
ADDED : டிச 07, 2024 02:00 AM

டாக்கா, வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படுபவரும், முன்னாள் பிரதமருமான, மறைந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்க, அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிராக கடந்த ஜூலையில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரம் அடைந்து, தலைநகர் டாக்காவின் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
போராட்டம்
போராட்டம் கையை மீறி போனதை அடுத்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, ஆகஸ்டில் நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது.இந்நிலையில், வங்கதேசத்தின் ரூபாய் நோட்டுகளில் இருந்து, முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான மறைந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படத்தை நீக்க, அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.
நாணயங்களும் மாற்றம்
புதிதாக அச்சடிக்கப்படும் 20, 100, 500, 1,000 ரூபாய் நோட்டுகளில், ஷேக் முஜிபுர் படத்துக்கு பதிலாக, மதம் தொடர்புடைய கட்டமைப்புகள், வங்க பாரம்பரியம், மாணவர்களின் ஜூலை போராட்ட சித்திரங்கள் உள்ளிட்டவற்றை அச்சடிக்க, மத்திய வங்கிக்கு இடைக்கால அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த புதிய ரூபாய் நோட்டுகள் அடுத்த ஆறு மாதங்களில் புழக்கத்துக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புழக்கத்தில் உள்ள நாணயங்களையும் மாற்ற இடைக்கால அரசு திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.