ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பூடான் ஆதரவு
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பூடான் ஆதரவு
ADDED : செப் 28, 2025 03:11 AM

வாஷிங்டன்:'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு, இந்தியாவும், ஜப்பானும் தகுதியான நாடுகள்' என, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆதரவு தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா.,வின், 80வது பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது.
இதில், பங்கேற்ற பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவும், ஜப்பானும் நிரந்தர உறுப்பினராவதற்கு தன் ஆதரவை தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
இன்றைய உலக நிலவரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நா.,வில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், தற்போது, 'பழங்கால நினைவு சின்னம்' போல உள்ளது.
பயனுள்ள அமைப்பாக இருக்க வேண்டும் என்றால், கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
அத்துடன், திறன்கள் மற்றும் தலைமை பண்பிற்காக, இந்தியாவும், ஜப்பானும் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும். இதுதவிர மற்ற திறமையான முன்னணி நாடுகளும் கவுன்சிலில் இடம் பெற வேண்டும்.
பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்து, காலநிலை மாற்றம், வறுமை மற்றும் சர்வதேச மோதல்கள் போன்ற அவசர சவால்களை சமாளிப்பதற்கு ஏற்ப வலுப்படுத்த வேண்டும்.
தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றும் அமைப்பாக இல்லாமல், உறுதியான முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்தும் அமைப்பாகவும் இருக்க வேண்டும். அதையே பூடான் விரும்புகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.