மக்களுக்கு இணையாக பூனைகள் பெருக்கம்: திக்குமுக்காடும் சைப்ரஸ்
மக்களுக்கு இணையாக பூனைகள் பெருக்கம்: திக்குமுக்காடும் சைப்ரஸ்
ADDED : அக் 15, 2025 11:32 PM

நிக்கோசியா:சைப்ரஸ் நாட்டில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.
மேற்காசிய நாடான சைப்ரஸ், நீண்டகாலமாக பூனைகளை விரும்பும் சிறிய தீவு நாடாக உள்ளது. இங்கு, 9,500 ஆண்டுகளுக்கு முன், மனிதருடன் புதைக்கப்பட்ட பூனையின் எலும்புகள் அங்கு கண்டறியப்பட்டதே அதற்கு சான்று.
நான்காம் நுாற்றாண்டில் புனித ஹெலன் என்ற பாதிரியார், பாம்பு பிரச்னையை சமாளிக்க பூனைக ளை அந்த தீவுக்கு அழைத்து வந்ததாகக் கூறப் படுகிறது.
கட்டுப்பாடற்ற இனப்பெருக்கம், ஊர் மக்களின் பராமரிப்பு போன்ற காரணங்களால் தற்போது அங்கு எங்கும் பூனைகள் மயமாகவே காட்சியளிக்கிறது.
சைப்ரசில், ௧0 லட்சம் தெருப் பூனைகள் உள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இது தோராய மதிப்பீடுதான்.
நாட்டின் மக்கள்தொகை, 13.6 லட்சமாக உள்ள நிலையில், கிட்டத்தட்ட அதற்கு இணையாக பூனைகள் எண்ணிக்கையும் உள்ளன.
நாட்டின் தற்போதைய பூனை கருத்தடை திட்டம் பலனளிக்கவில்லை. இதனால், அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகி வருகிறது. மேலும் பூனைகளால் தீவின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, உணவு மற்றும் தங்குமிடம் தேடி தெருக்களில் அலைவதால், அவை துன்புறுத்தல்களையும் சந்திக்கின்றன.
இந்நிலையில், பூனைகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, அந்த நாட்டு அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.