சாம்பியன்ஸ் டிராபி பைனல்: ரூ.5 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
சாம்பியன்ஸ் டிராபி பைனல்: ரூ.5 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்
ADDED : மார் 08, 2025 10:13 PM

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் நாளை இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள நிலையில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இத்தொடரின் பைனல் நாளை துபாயில் நடக்க உள்ளது. இத்தொடரில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணியை, நியூசிலாந்து சந்திக்கிறது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்தியா கோப்பை வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்நிலையில், நாளை நடக்கும் பைனலுக்கு சூதாட்டக்காரர்கள் அதிகளவு பணம் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளியான தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: சர்வதேச சூதாட்டக்காரர்களுக்கு விருப்பமான அணியாக இந்தியா உள்ளது. அவர்கள் அனைவரும் நிழல் உலக தாதா கும்பலுடன் தொடர்புடையவர்கள். ஏராளமானோர் போட்டியை பார்க்க துபாயில் குவிந்து உள்ளனர்.
துபாயில் நடக்கும் சூதாட்டத்தில், பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 'டி கும்பல்' ஈடுபட்டு உள்ளது.
சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டில்லியில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அரையிறுதிப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், விசாரணை துபாய் வரை நீண்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொபைல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.