ADDED : ஏப் 17, 2025 06:29 AM

நியூயார்க்: அமெரிக்க பல்கலையில் படிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு 'எப் - 1' எனப்படும் விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவின் கீழ் கிரிஷ் லால் இஸ்ஸர்தாசானி, 21, என்ற இந்திய மாணவர், அங்கு உள்ள விஸ்கான்சின் - -மேடிசன் பல்கலையில் கணினி பொறியியல் படிக்கிறார்; மே மாதம் படிப்பை நிறைவு செய்ய உள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் தன் நண்பர்களுடன் சேர்ந்து மதுபான விடுதிக்கு சென்றார். அங்கு, மற்றொரு குழுவினருக்கும், கல்லுாரி மாணவர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில், ஒழுங்கீன நடவடிக்கைக்காக மாணவர் கிரிஷ் கைது செய்யப்பட்டார். அவரின் விபரங்கள், 'செவிஸ்' எனப்படும் வெளிநாட்டு மாணவர்களுக்கான தளத்தில் இருந்து நீக்கப்பட்டதால், மாணவர் கிரிஷின் விசாவை கடந்த 4ல் அமெரிக்க உள்துறை ரத்து செய்தது; கிரிஷை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப திட்டமிட்டிருந்தது.
இதை எதிர்த்து, மாணவர் சார்பில் விஸ்கான்சின் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவர் கிரிஷ், தண்டனை பெறவில்லை எனும் போது, அவரின் விசாவை ரத்து செய்தது தவறானது' எனக்கூறி, அவரின் விசா ரத்துக்கு தடை விதித்தார்.